சென்னை – இயக்குநர் பிரபாகரனின், “ஒரு இயக்குநரின் காதல் டைரி” என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன் நடைபெற்றது.
இத்திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார் என்பதால் அவரும் இசை வெளியீட்டு விழாவில் முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இந்நிலையில், பாடலாசிரியர் சினேகன் மேடையில் பேசும் போது, மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, இளையராஜாவை திரையுலகம் ஒதுக்கி வைத்துவிட்டதாகவும், அரசாங்கம் கூட அவரது பெயரில் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், சாலைகளுக்குப் பெயர் வைக்கவில்லை என்றும் ஆதங்கப்பட்டார்.
பல இடங்களில் இளையராஜாவை ஒருமையில் பேசிய சினேகன், உணர்ச்சியின் மிகுதியில், “நீ கருப்பனாய் பிறந்தது தவறு” என்று கூறினார்.
சினேகனின் ஆர்வக்கோளாறான பேச்சைப் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த இளையராஜா, ஒருகட்டத்தில் இடை மறித்து, சினேகனை அருகே அழைத்து, “நாலு தெருவுக்கு என் பெயர் வச்சாச்சுன்னா உனக்கு சந்தோசமா இருக்குமா? நாலு பள்ளிக்கூடத்துக்கு என் பெயர் வச்சா போதுமா? பேசுங்க.. நான் கேட்டுக்கிட்டே இருக்கேன்.. உங்க மனசுல.. உங்க இரத்தத்துல ..உங்க உயிர்ல எப்பவும் ஓடிட்டு இருக்கேன் அதை விட்டுட்டு மண்ணுலையும், மரத்திலும் என் பெயர் எழுதி வச்சா ரொம்ப காலம் நின்றுவிடுமோ?.. உங்க மனசுல நிக்குதுயா.. உங்க மனசுல நிக்குறது இளையராஜா என்ற உயிர் ஒன்று தான்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.