புத்ராஜெயா – மான்செஸ்டரில் படித்து வரும் 3 மலேசிய மாணவர்களை, திங்கட்கிழமை மாலை, அந்நாட்டு நேரப்படி 5.40 மணியளவில் மான்செஸ்டர் காவல்துறை கைது செய்ததாக மலேசிய வெளியுறவு அமைச்சு அறிவித்திருக்கிறது.
அவர்கள் 3 பேரிடமும், தற்கொலைத் தாக்குதல் நடத்திய சல்மான் அபிதி குறித்துத் தெரியுமா? அவனைச் சந்தித்தது உண்டா? அவனுடன் பழகியிருக்கிறீர்களா? என்பது குறித்து சுமார் மூன்றரை மணி நேரம் காவல்துறை விசாரணை நடத்தியிருக்கிறது.
பின்னர் அவர்கள் மூவரும் இரவு 9 மணியளவில் விடுவிக்கப்பட்டதாகவும் வெளியுறவு அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
வடக்கு இங்கிலாந்தில் கடந்த மே 22-ம் தேதி திங்கட்கிழமை இரவு, அரியான் கிராண்டே என்ற பிரபல அமெரிக்க இளம் பாடகியின் இசை நிகழ்ச்சி நடைபெற்ற வளாகத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 22 பேர் மரணமடைந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில், இத்தற்கொலைத் தாக்குதலை நடத்தியவன் பெயர் சல்மான் அபிதி என்பதை மான்செஸ்டர் காவல்துறையினர் அண்மையில் அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.