கோலாலம்பூர் – டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் ஓரினப் புணர்ச்சி வழக்கை அரசாங்கத்தின் சார்பில் நடத்திய டான்ஸ்ரீ ஷாபி அப்துல்லா பிரதமர் நஜிப்பிடம் இருந்து 9.5 மில்லியன் ரிங்கிட் பெற்றார் என காவல்துறையில் செய்யப்பட்டிருக்கும் புகார்களை நடுநிலையோடும், பாரபட்சமின்றியும் விசாரிக்க வேண்டும் என மலேசிய வழக்கறிஞர் மன்றம் அறிவித்திருக்கின்றது.
இந்தக் குற்றச்சாட்டுகள் கடுமையானவை என்பதால் இவை குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என வழக்கறிஞர் மன்றத் தலைவர் ஜோர்ஜ் வர்கீஸ் (படம்) தெரிவித்திருக்கின்றார்.
இருப்பினும் அதற்குள்ளாக ஷாபி மீதான விசாரணை எதனையும் வழக்கறிஞர் மன்றம் மேற்கொள்ளாது என்றும் தெரிவித்திருக்கும் ஜோர்ஜ் வர்கீஸ் அதற்குக் காரணம் அவர் வழக்கறிஞர் தொழிலில் நெறிதவறி நடந்தார் என்பது குறித்த போதிய ஆதாரங்கள் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
பெர்சாத்து கட்சியின் இளைஞர் பகுதித் தலைவர் சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மான் வெள்ளிக்கிழமை (2 ஜூன் 2017) காவல் துறையில் ஷாபி அப்துல்லா நஜிப்பிடம் இருந்து பணம் பெற்றது குறித்து புகார் செய்திருந்தார்.
இதன் தொடர்பில் கருத்துரைத்தபோதே மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைவர் ஜோர்ஜ் வர்கீஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.