Home Featured கலையுலகம் நடிகர் சதீஸ் ராவ் மரணம் – பேரதிர்ச்சியில் மலேசியக் கலைத்துறை!

நடிகர் சதீஸ் ராவ் மரணம் – பேரதிர்ச்சியில் மலேசியக் கலைத்துறை!

1162
0
SHARE
Ad

SathishRaoகோலாலம்பூர் – வளர்ந்து வரும் மலேசியத் திரையுலகில், பல கனவுகளோடு, கடுமையாகப் போராடி, தனது திறமைகளையெல்லாம் நிரூபித்து, அனைவருக்கும் தெரிந்த ஒரு நடிகராக முன்னேறிய சதீஸ் ராவ், இன்னும் பெரிய அளவிலான வெற்றிகளையும், விருதுகளையும் குவிப்பதற்கு முன்பே, திடீர் மரணமடைந்தது ஒட்டுமொத்த மலேசியக் கலைத்துறையை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

நேற்று சனிக்கிழமை மாலை தனது குடும்பத்தின் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குவாங் அருகே ஒரு பங்களாவிற்குச் சென்ற சதீஸ் ராவ், அங்கிருந்த நீச்சல் குளத்தில் குளிக்கச் சென்ற போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி இறந்தார்.

இதில் மிகவும் சோகமான செய்தி என்னவென்றால், இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் தனது ஃபேஸ்புக்கில் நேரலையில் வந்த சதீஸ் ராவ், தான் குவாங்கில் அமைந்திருக்கும் அந்த பங்களாவில் தனது குடும்பத்தோடு விடுமுறையைக் கழிக்க வந்திருப்பதாகவும், மிகவும் ரம்யமாக இருக்கும் அந்த இடத்தில், முடிந்தால் ஒரு திரைப்படம் எடுக்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இக்காணொளி வெளியிட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு குளிக்கச் சென்ற அவர், நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கிறார்.

மலாய், சீன மொழி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு என ஐந்து மொழிகளில் சரளமாகப் பேசும் ஆற்றல் கொண்ட சதீஸ் ராவ், சீன மொழி நாடகங்களின் வழியாக தான் மலேசியத் திரையுலகில் கால்பதித்தார்.

பின்னர், மலாய் நாடகங்களில் முன்னணிக் கதாப்பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கிய அவர், தமிழ் நாடகங்கள் மற்றும் திரைப்படங்களிலும் நடிக்கத் தொடங்கினார்.

மேலும், உடற்பயிற்சி செய்து உடம்பைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்த காரணத்தால், சதீஸ் ராவுக்கு வில்லன் கதாப்பாத்திரங்களும் தேடி வரத் தொடங்கின.

அதுமட்டுமின்றி இயக்குநர் விஜய சிங்கத்தின் ‘சாணக்கிய சபதம்’ உள்ளிட்ட மேடை நாடகங்களிலும் நடித்திருக்கிறார்.
பாலகணபதி வில்லியம் இயக்கத்தில் தற்போது புதிதாக உருவாகியிருக்கும் ‘நீயும் நானும்’ என்ற திரைப்படத்தில் சதீஸ் ராவ் நடித்திருப்பதாகக் கூறப்படுகின்றது.

இத்தனை திறமைகளைக் கொண்டிருந்த சதீஸ் ராவின் திடீர் மரணத்தை அறிந்த மலேசியக் கலைஞர்கள் நேற்று இரவு முதல் மிகவும் சோகத்தில் மூழ்கியிருக்கின்றனர். ஃபேஸ்புக்கில் தங்களது வருத்தத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.

சதீஸ் ராவின் இறுதிச்சடங்குகள் நாளை ஜூன் 5-ம் தேதி, திங்கட்கிழமை, No.8, Jalan Tertib 25/32. Tmn Sri Muda, Seksyen 25, Shah Alam என்ற முகவரியில் மதியம் 12.32 தொடங்கி 2 மணி வரை நடைபெறவிருப்பதாக சதீஸ் ராவ் குடும்பத்தினர் அறிவித்திருக்கின்றனர்.

சதீஸ் ராவை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் செல்லியல் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.