மதுரை, ஜன. 16- பொங்கல் திருநாள் என்றாலே தென்மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டுதான் நினைவுக்கு வரும். உயிரை பணயம் வைத்து இளைஞர்கள் காளைகளை பிடிக்கும் இந்நிகழ்வைக் காண பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் பொங்கல் உற்சாகத்துடன், ஜல்லிக்கட்டும் களைகட்டியுள்ளது.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படியும், மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பிலும், விலங்குகள் நலவாரியம் மேற்பார்வையிலும் போட்டிகள் நடைபெற்றன. புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கை வாசல் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் காளை முட்டியதில் ஒருவர் இறந்தார். உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 38 பேர் காயமடைந்தனர். இவர்களில் 2 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
மாநிலம் முழுவதிலும் இருந்து மொத்தம் 477 மாடுகள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டன. சிவகங்கை மாவட்டத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் 29பேர் காயமடைந்தனர். இதில் 10 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.