ஷா ஆலாம் – சீபீல்ட் மாரியம்மன் ஆலயத்தை இடம் மாற்றும் முடிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாக சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி உறுதிப்படுத்தியிருக்கிறார்.
பழமை வாய்ந்த சீபீல்ட் மாரியம்மன் ஆலயம் அகற்றப்பட்டு, வேறு இடத்தில் அமைக்கப்படுவது தொடர்பில் இந்திய சமுதாயத்தில் எழுந்துள்ள கொந்தளிப்புகளைத் தொடர்ந்து, ஆலயத்தை இடம் மாற்றும் உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாகவும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட நில மேம்பாட்டாளருடன் தான் நேரடியாகப் பேசியிருப்பதாகவும் அஸ்மின் அலி தெரிவித்திருக்கிறார்.
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்புகளுடனும் தான் பேச்சு வார்த்தை நடத்தி இந்தப் பிரச்சனைக்கு சுமுகமான தீர்வு காண முயற்சி செய்யப் போவதாகவும் அஸ்மின் அலி கூறியிருக்கின்றார்.
இன்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் கணபதி ராவ், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சாண்டியாகோ, பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங், சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராசா ஆகியோருடன் தான் இது குறித்து கலந்தாலோசித்ததாகவும் அஸ்மின் தெரிவித்தார்.
சீபீல்ட் ஆலயத்தை உடைத்து அப்புறப்படுத்துவதற்கு நில மேம்பாட்டாளரான ஒன் சிட்டி டெவலப்மெண்ட் சென்டிரியான் பெர்ஹாட் நீதிமன்ற உத்தரவைப் பெற்றிருப்பதாகவும், தற்போது இந்த நீதிமன்ற உத்தரவு குறித்த சட்ட சர்ச்சைகள் எழுந்துள்ளதாகவும் அஸ்மின் அலி குறிப்பிட்டார்.