கோலாலம்பூர் – மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தைச் சேர்ந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், கோலாலம்பூரில் அமைந்திருக்கும் பெல்டா (Federal Land Authority ) தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை அதிரடியாக நுழைந்திருக்கின்றனர்.
பெல்டா குளோபல் வெஞ்சர்ஸ் பெர்ஹாட் நிறுனத்தை விசாரணை செய்யவும், ஆவணங்களைச் சோதனை செய்யவும் மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணைய (எம்ஏசிசி) அதிகாரிகள் அங்கிருப்பதாகத் தெரிகின்றது.
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் பெல்டா குளோபல் நிறுவனத்தின் தலைமைச்செயலதிகாரி சக்காரியா அர்ஷாட் நேற்று மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத் தலைமையகத்தில் வாக்குமூலம் அளித்ததையடுத்து இன்று இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்த சூழலில்தான் நேற்று மத்திய அரசாங்கம் பெல்டா குளோபல் வெஞ்சர்ஸ் நிறுவனம் குறித்து கண்காணிக்கவும், மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆராயவும், முன்னாள் அமைச்சரும், பொருளாதார நிபுணருமான இட்ரிஸ் ஜாலாவை (படம்) நியமித்திருக்கின்றது.