Home Featured தமிழ் நாடு “துணைப் பிரதமர் அலுவலக உத்தரவினால் திருப்பி அனுப்பப்பட்டேன்” – வைகோ

“துணைப் பிரதமர் அலுவலக உத்தரவினால் திருப்பி அனுப்பப்பட்டேன்” – வைகோ

1645
0
SHARE
Ad

vaiko_20092011_periyarthalam2

சென்னை – நேற்றிரவு சென்னை திரும்பிய வைகோ விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கோலாலம்பூர் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட விதம் குறித்தும், அங்கு தான் நடத்தப்பட்ட விதம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். அதன் முக்கிய அம்சங்கள்:

  • பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமியின் மகள் திருமண வைபவ விருந்து சனிக்கிழமை ஜூன் 10-ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு அவர் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதனை ஏற்று, முறையான மலேசிய விசா பெற்று நான் கோலாலம்பூர் சென்றேன்.
  • இதுவரையில் வாழ்க்கையில் நான் பெற்ற எத்தனையோ அனுபவங்களில் இது ஒரு புதிய அனுபவம். கடந்த 24 மணி நேரமாக நான் எதுவுமே சாப்பிடவில்லை.வீட்டில் சாப்பிட்டு விட்டு சென்றதுதான்.
  • நான் கோலாலம்பூர் விமான நிலையத்தில் எனது பாஸ்போர்ட்டைக் காட்டியதுமே நீங்கள் “கறுப்புப் பட்டியலிடப்பட்டிருக்கிறீர்கள்” (black listed) என்று கூறிய மலேசிய அதிகாரிகள் உங்கள் மீது நிறைய வழக்குகள் இருக்கின்றன என்றும் கூறினர். அதனால், உங்களைஅனுமதிக்க முடியாது என்றும் அதிகாரிகள் கூறினர்.
  • தொடர்ந்து நீங்கள் எல்டிடிஇ அமைப்பைச் சேர்ந்தவரா, இலங்கையிலிருந்து வருகிறீர்களா என்றும் கேட்டனர். அதற்கு நான் எல்டிடிஇ அமைப்பின் ஆதரவாளர் என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்றும் கூறி, எனது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கான அடையாள அட்டை, பேராசிரியர் இராமசாமியின் இல்லத் திருமண அழைப்பிதழ், அவர் எனக்கு அனுப்பிய கடிதம் என அனைத்தையும் காட்டினேன்.
  • “இருங்கள் நாங்கள் என்ன செய்ய முடியும் என்று பார்க்கிறோம்” என்று கூறியவர்கள் பின்னர் “எங்களுக்குத் துணைப் பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்துவிட்டது. உங்களை அனுமதிக்க முடியாது” என்றும் கூறினர்.
  • இதற்கிடையில் என்னைத் தொடர்பு கொண்ட பேராசிரியர் இராமசாமி மிகவும் வருத்தப்பட்டார். உடனே பினாங்கு முதல்வர் லிம் குவான் துணைப் பிரதமருடன் தொடர்பு கொண்டு பேசியிருக்கின்றார். இருப்பினும் பின்னர் இராமசாமி என்னிடம் “உங்களை அனுமதிக்கக் கூடாது என்பதில் அவர்கள் விடாப் பிடியாக (stubborn) இருக்கிறார்கள். நீங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு மிரட்டலாக இருக்கிறீர்கள் என்றும் கூறுகிறார்கள்” என்று தெரிவித்தார்.
  • எனக்கு அனுமதி இல்லை என்றவுடன் என்னை விமான நிலையத்தில் சாமான்கள் வைத்திருக்கும் பகுதியில் அமர வைத்தனர். நான் எங்கேயும் போக முடியாது என்றும் சாப்பிடக் கூட போக முடியாது என்றும் அவர்கள் கூறிவிட்டனர். வேண்டுமானால் உங்களின் செயலாளர் சென்று உணவு வாங்கி வந்து நீங்கள் சாப்பிடலாம் என்றார்கள். என்னைக் கைதி போல் நடத்தியதால், நான் சாப்பிட விரும்பவில்லை.
  • மலேசிய அதிகாரிகளை நான் குறை சொல்ல மாட்டேன். அவர்கள் கடமையைத்தான் செய்தார்கள். சில பெண் அதிகாரிகள் என்னிடம் அன்பாகவும் நடந்து கொண்டார்கள். ஆனால், அவர்கள் மேலிடத்து உத்தரவுகள் காரணமாக அத்தகைய முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது.

“எனது தடைக்குக் காரணம் இலங்கை அரசுதான்”

  • என்னைத் தடை செய்ததற்குக் காரணம் இலங்கை அரசுதான். இலங்கை அரசு இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவித்ததை நான் கடுமையாக எதிர்த்துப் பேசி வந்ததால், இலங்கை அரசு எனக்கு எதிராக அறிக்கை தயார் செய்து நான் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவன் என்று மலேசியா போன்று பல நாடுகளிடம் தெரிவித்திருக்கின்றனர். அதற்கு ஆதாரமாக நான் பிரபாகரன் உயிருடன் இருந்தபோது அவரைச் சந்திக்கச் சென்றபோது, நான் அணிந்திருந்த விடுதலைப் புலிகளுக்கான இராணுவ உடை புகைப்படங்களை அவர்கள் பயன்படுத்தியிருக்கின்றனர்.
  • பிரபாகரனைச் சந்திக்கச் சென்றபோது பாதுகாப்புக்காக அவர்கள் எனக்குக் கொடுத்த ஆடையைத்தான் நான் அணிந்திருந்தேன். இலங்கை அரசின் இந்த நடவடிக்கை காரணமாக, நான் பல நாடுகளுக்கு செல்வதற்கு விசா பெறுவதில் தடை ஏற்பட்டிருக்கின்றது.
  • இதற்கிடையில் தனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த மு.க.ஸ்டாலின், திருமாவளவன், திருநாவுக்கரசர் ஆகியோருக்கும் வைகோ நன்றி தெரிவித்துக் கொண்டார்.

– செல்லியல் தொகுப்பு