Home அரசியல் ஜோகூர் பாரு அன்வார் கூட்டத்தில் 10,000 பேர் – வேட்பாளர் அறிவிப்புகள் நிகழவில்லை.

ஜோகூர் பாரு அன்வார் கூட்டத்தில் 10,000 பேர் – வேட்பாளர் அறிவிப்புகள் நிகழவில்லை.

471
0
SHARE
Ad

anwar1ஜோகூர் பாரு, மார்ச் 24 – கம்போங் மலாயு மாஜிடி என்பது ஜோகூர் பாரு நாடாளுமன்ற தொகுதியின் கீழ் வரும் ஒரு பகுதியாகும். தேசிய முன்னணியின் கோட்டையாகக் கருதப்படும் இந்த இடத்தில் நேற்று மார்ச் 23ஆம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் உரையாற்ற வந்தபோது, ஏறத்தாழ 10,00 பேர் திரண்டது ஜோகூர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2008 பொதுத் தேர்தலில் நிகழ்ந்த அரசியல் சுனாமியில் தப்பித்த மாநிலம் ஜோகூர். இந்த முறை அரசியல் சுனாமி தெற்கிலிருந்து, அதாவது ஜோகூர் மாநிலத்தில் இருந்துதான் தொடங்கும் என மக்கள் கூட்டணி தலைவர்கள் தொடர்ந்து முழக்கமிட்டு வருகின்றனர்.

இருப்பினும் பலரும் எதிர்பார்த்தபடி இந்த கூட்டத்தில் ஜோகூர் மாநிலத்தின் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் அறிவிப்புகள் நிகழவில்லை.

#TamilSchoolmychoice

இதனால், மக்கள் கூட்டணி கட்சிகளுக்கிடையே ஜோகூர் நாடாளுமன்ற தொகுதிகளைப் பகிர்ந்து கொள்வதில் இன்னும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து கொண்டிருப்பது தெரிகின்றது.

வழக்கம்போல் மற்ற மக்கள் கூட்டணித் தலைவர்கள் முதலில் உரையாற்ற, அன்வார் கம்போங் மலாயு மஜிடிக்கு இரவு 11.30 மணிக்கு வந்து சேர்ந்தார். அதற்கு முன்பாக சிம்பாங் ரெங்கம் என்ற இடத்தில் அவர் உரையாற்றினார்.

அவர் வந்து சேர்வதற்குள் பெரிதாகிக் கொண்டிருந்த கூட்டம், அவர் பேசத் தொடங்கும்போது ஏறத்தாழ 10 ஆயிரத்தைத் தொட்டிருக்கும் என பார்வையாளர்கள் கூறினர்.

ஜோகூர் பாரு வேட்பாளர் யார்?

ஜோகூர் பாருவின் நடப்பு வேட்பாளர் டான்ஸ்ரீ ஷாரிர் அப்துல் சமாட்டை எதிர்த்து பிகேஆர் கட்சி, ஒரு முன்னாள் இராணுவத் தலைவரான ஜெனரல் முகமட் ஹாஷிம் ஹூசேன் என்பவரை நிறுத்த உத்தேசித்துள்ளது. அவருக்கு நேற்று உடல் நலம் சரியில்லாததால் அவர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அதனால் அவரது வேட்பாளர் அறிவிப்பும் நிகழவில்லை.

கடந்த பல தவணைகளாக ஜோகூர் பாருவைத் தற்காத்து வந்திருக்கும் ஷாரின் சமாட் இம்முறை போட்டியிடுவாரா என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால் அவரைத் தவிர யார் அங்கு தேசிய முன்னணி வேட்பாளராக நின்றாலும் தோல்வி அடையும் சாத்தியம் இருப்பதால் அவரையே மீண்டும் நிறுத்த தேசிய முன்னணி தலைமைத்துவம் முன்வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

94,305 வாக்காளர்களைக் கொண்ட ஜோகூர் பாரு நாடாளுமன்ற தொகுதியில் 51 சதவீத மலாய் வாக்காளர்களும், 43 சதவீத சீன வாக்காளர்களும், 5 சதவீத இந்திய வாக்காளர்களும் உள்ளனர்.

இந்த தொகுதியில் 2008 பொதுத் தேர்தலில் ஷாரிர் 25,349 வாக்குகள் வித்தியாசத்தில் பிகேஆர் வேட்பாளரைத் தோற்கடித்து வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.