மார்ச் 24 – அண்மையில் சபா மாநிலத்தின் லாகாட் டத்து பகுதியில் அந்நிய சக்திகளால் நிகழ்ந்த ஊடுருவலைப் பற்றி விசாரிக்க புதிய அரச விசாரணை ஆணையம் ஒன்றை நிறுவும் அறிவிப்பை நாளை பிரதமர் நஜிப் செய்வார் என உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹூசேன் கூறியுள்ளார்.
அரச விசாரணைக் குழு ஒன்றை அமைப்பது குறித்து இன்னும் இறுதி வடிவம் கொடுக்கப்படவில்லை என்றாலும் சூலு சுல்தான் படையினர் என்று கூறிக் கொண்டு ஊடுருவலை மேற்கொண்டவர்களுக்கு பின்னணியில் இருந்தவர்கள் யார் என்ற விசாரணைகளை உள்துறை அமைச்சு ஏற்கனவே வெளிநாட்டு அரசாங்க உளவு அமைப்புக்களுடன் தொடங்கி விட்டதாகவும் ஹிஷாமுடின் கூறியுள்ளார்.
குறிப்பாக பிலிப்பைன்ஸ் நாட்டின் உளவு ஒருங்கிணைப்பு அமைப்புடன் மலேசிய காவல் துறையின் சிறப்புப் பிரிவு (ஸ்பெஷல் பிரசாஞ்ச்) மிகவும் நெருக்கமாக இணைந்து தகவல்களைப் பெற செயல்பட்டு வருகின்றது என்றும் உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
ஏற்கனவே, சபா மாநிலத்தில் சட்டத்துக்கு புறம்பான முறையில் அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டது குறித்து ஏற்கனவே ஒரு அரச விசாரணைக் குழு தனது விசாரணையை நடத்தி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் திடீரென்று அந்த விசாரணைக் குழுவின் நடவடிக்கைகள் அடுத்த ஆறு மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றது.