Home Featured நாடு நவீன் மரணத்தையும் அரசியலாக்கும் ஜசெகவின் ஜக்டிப் சிங்!

நவீன் மரணத்தையும் அரசியலாக்கும் ஜசெகவின் ஜக்டிப் சிங்!

758
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் – அண்மையில் சக மாணவர்களின் தாக்குதலால் காலமான டி.நவீனின் மரணத்தையும் அரசியலாக்கியிருக்கிறது ஜசெக. அதன் முக்கியத் தலைவர்களில் ஒருவரும் பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான ஜக்டிப் சிங் டியோ (படம்), தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் ஒரு செய்தியில் நவீனின் மரணத்திற்கு தேசிய முன்னணியின் மத்திய அரசாங்கம்தான் காரணம் எனக் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இந்த செயலுக்கு அடிப்படைக் காரணம் மத்திய அரசாங்கம்தான் என்றும் இந்த சம்பவத்தைத் தடுக்க முடியாத காரணத்தால் நவீனின் குடும்பத்திற்கு இந்த பேரிழப்பு ஏற்பட்டது என்றும் ஜக்டிப் தனது பதிவில் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

இதே போன்று நாட்டையும் தோல்வி நிலைக்கு அழைத்துச் செல்லவேண்டாம் என்றும், எங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டால் தேசிய முன்னணி எதில் தோல்வியடைந்ததோ, அதை நிவர்த்தி செய்து வெற்றியடைவோம் என்றும் ஜக்டிப் தனது பதிவில் தெரிவித்திருக்கிறார்.

ஒரு பதின்ம வயது மாணவனின் மரணத்தை வைத்து அரசியல் இலாபம் காண நினைக்கும் ஜக்டிப் சிங்கின் போக்குக்கு எதிராக இணையவாசிகள் கடுமையான கண்டனக் குரல்களைப் பதிவு செய்திருக்கின்றனர்.

சக மாணவர்கள் சிலரால் நடத்தப்பட்ட தாக்குதலால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நவீன் (படம்) கடந்த வியாழக்கிழமை ஜூன் 15-ஆம் தேதி மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

எல்லாவற்றுக்கும் மத்திய அரசாங்கத்தையும், தேசிய முன்னணியையும் குறை சொல்லும் எதிர்க்கட்சியினர் சக மாணவர்களின் தாக்குதலால் மரணமடைந்த ஒரு மாணவனின் மரணத்திற்கும் மத்திய அரசாங்கம்தான் எனக் குறை கூறுவது கீழ்த்தரமான அரசியல் போக்கு எனப் பலர் ஜக்டிப் சிங்கை சாடியிருக்கின்றனர்.

அப்படியானால், பினாங்கு மாநிலத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பதால், அவர்களுக்கும்- மாநில அரசாங்கத்திற்கும் – இதில் பொறுப்பு இல்லையா? அவர்களும் நவீனின் மரணத்திற்கு ஒரு காரணம் என்று சொல்லலாமா எனவும் சிலர் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

ஜக்டிப் சிங் டியோ பினாங்கு மாநில சட்டமன்ற உறுப்பினர் என்பதோடு, பினாங்கு மாநில அரசாங்கத்தின் ஆட்சிக் குழு உறுப்பினர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உரிய நடவடிக்கை எடுக்காததற்கு சில அரசு இலாகாக்களைக் குறை சொல்வது தப்பில்லை. ஆனால், ஒட்டு மொத்த மத்திய அரசாங்கத்தையும் குற்றம் சாட்டுவதும், நவீனின் மரணத்தை வைத்து எங்களிடம் ஆட்சியைக் கொடுங்கள் எனக் கோரிக்கை வைப்பத்தும், என்ன கீழ்த்தரமான அரசியல்?

நவீனின் மரணத்திற்கு பினாங்கு மாநில அரசாங்கம்தான் காரணம் என்று கூறுவது எவ்வளவு அபத்தமோ, அதே அளவுக்கு அபத்தம் மத்திய அரசாங்கம் காரணம் என்று கூறுவதும் எனப் பலர் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.

மலேசிய சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் சில சமூக சீர்கேடுகளின் – அவலங்களின் – வெளிப்பாடுதான் நவீனின் மரணமே தவிர, மத்திய அரசாங்கம் மட்டும் இதற்குக் காரணம் அல்லை!

நவீனைத் தாக்கிய அந்த மாணவர்களின் குடும்பச் சூழல், பெற்றோர்களின் வளர்ப்பு முறை, சுற்றுச் சூழல் போன்றவையே நவீனின் மரணத்திற்கான முதல் காரணங்கள் என்றும் பல இணையவாசிகள் ஜக்டிப் சிங்கிற்கு பதில் கொடுத்துள்ளனர்.

ஆளும் கட்சி, எதிர்க் கட்சிகள் உட்பட அனைவரும், பொதுமக்களும், பெற்றோர்களும்,  என எல்லாத் தரப்பினரும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் – அதற்கேற்ற நடவடிக்கைகளை முன்மொழிய வேண்டுமே தவிர, ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதோ, அதிலும் இதை வைத்து அரசியல் நடத்துவதோ நாகரிகமாக இருக்காது.

-இரா.முத்தரசன்