கோலாலம்பூர் – 1எம்டிபி விவகாரத்தில், ரோஸ்மா தன் மீதான குற்றச்சாட்டுகளை பொய் என்று நிரூபிக்க வேண்டுமானால், குற்றம்சாட்டுபவர்களை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது வலியுறுத்தியிருக்கிறார்.
“தன்னைப் பற்றி அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என ரோஸ்மா கூறியிருக்கிறார். ஆனால் நான் பயப்பட மாட்டேன். காரணம் இது அவதூறு அல்ல. உண்மையை வெளிக்கொண்டு வருதல்” என்று பெர்சாத்து கட்சியின் தலைவருமான மகாதீர் காணொளி ஒன்றை பேசி வெளியிட்டிருக்கிறார்.
1எம்டிபி விவகாரத்தில், அமெரிக்க நீதித் துறை இலாகா (டிஓஜே) வெளியிட்ட ஆவணங்களில், ‘மலேசிய அதிகாரி 1’ என்பவரின் மனைவி 1 எம்டிபி பணத்தின் மூலம் விலையுயர்ந்த கழுத்து நகையான நெக்லசும், மற்ற ஆபரணங்களும் வாங்கினார் என்றும் இவற்றின் மதிப்பு 30 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேல் இருக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இதனையடுத்து, ரோஸ்மாவின் வழக்கறிஞர் வெளியிட்ட அறிக்கையில், “நாங்கள் நட்பு ஊடகங்களையும், இணையதளங்களையும் கவனித்து வருகின்றோம். அண்மையில், ரோஸ்மா மான்சோருக்கு எதிராக நட்பு ஊடகங்களில் பல அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. இது போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் எந்த ஒரு ஆதாரங்களும் இன்றி சொல்கின்றனர்” என்று குறிப்பிட்டிருந்தார்.
அதற்குப் பதிலளித்திருக்கும் மகாதீர், 1எம்டிபி நிதியில் இருந்து திருடப்பட்ட பணத்தில் இருந்து 1.3மில்லியன் அமெரிக்க டாலர் (5.5 மில்லியன் ரிங்கிட்) மதிப்புள்ள ஆபரணம் வாங்கப்பட்டிருப்பதாகச் சொல்லும் டிஓஜே அறிக்கையை சுட்டிக்காட்டியிருக்கிறார்.
“உங்களுக்கு தைரியம் இருந்தால், எங்கள் மீது வழக்குப் போடுங்கள். நான் தயாராக இருக்கிறேன்” என்றும் மகாதீர் சவால் விட்டிருக்கிறார்.
அமெரிக்க நீதித்துறை இலாகா வெளியிட்ட அறிக்கையில், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அல்லது அவரது துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மான்சோரின் பெயர்கள் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.