Home Featured நாடு நவீன் மரணம்: 4 இளைஞர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டு!

நவீன் மரணம்: 4 இளைஞர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டு!

886
0
SHARE
Ad

ஜார்ஜ் டவுன் – பினாங்கைச் சேர்ந்த 18 வயது இளைஞரான டி.நவீன், சக வயதினரால் சித்திரவதை செய்யப்பட்டு, மரணமடைந்த வழக்கில், 4 இளைஞர்கள் மீது இன்று திங்கட்கிழமை, நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இது குறித்து ஜார்ஜ் டவுன் ஓசிபிடி உதவி ஆணையர் அனுவார் ஓமார் கூறுகையில், “இவ்வழக்கு, ஆரம்பத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 148-ன் கீழ், ஆயுதங்கள் கொண்டு கலவரம் செய்ததாகப் பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தது. ஆனால் நவீன் இறந்ததையடுத்து, தற்போது இவ்வழக்கு பிரிவு 302-ன் கீழ் கொலை வழக்காகப் பதிவாகியிருக்கிறது” என்று தெரிவித்தார்.

இவ்வழக்கில் 16 முதல் 18 வயதுடைய 4 சந்தேக நபர்கள் மீது இன்று மதியம் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

#TamilSchoolmychoice

அதோடு, நவீனுடன், வந்த அவரது நண்பரான பிரவினைத் தாக்கிய குற்றத்திற்காக, அவர்கள் நால்வர் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 326-ன் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே, இந்த 4 இளைஞர்களோடு கைது செய்யப்பட்ட 18 வயதான இளைஞர், அரசுத் தரப்பு சாட்சியங்களின் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கடந்த ஜூன் 10-ம் தேதி, சனிக்கிழமை இரவு, 18 வயதான நவீனும், அவரது நண்பர் பிரனும், பர்கர் கடை ஒன்றின் அருகே முன்னாள் பள்ளித் தோழர்களால் தலைக்கவசத்தால் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.

இத்தாக்குதலில் இருந்து பிரவின் தப்பித்து ஓடிவிட, நவீனை அவர்கள் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றனர்.

பின்னர், புக்கிட் கெலுகோரில் உள்ள ஜாலான் காக்கி புக்கிட் என்ற இடத்தில் நவீன், சுயநினைவின்றிக் கிடந்தார். அவரை தாக்கிய இளைஞர்களில் ஒருவனின் சகோதரர், நவீனை பினாங்கு மருத்துவமனையில் சேர்த்தார்.

நவீனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் மூளைச் சாவு அடைந்துவிட்டதாகத் தெரிவித்ததோடு, அவர் ஓரினப்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

இந்நிலையில், கடந்த ஜூன் 15-ம் தேதி, மாலை 5.31 மணியளவில், பினாங்கு மருத்துவமனையில், நவீன் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.