Home நாடு மலேசியாவில் 12வது உலகத் தமிழ் இணைய மாநாடு

மலேசியாவில் 12வது உலகத் தமிழ் இணைய மாநாடு

1327
0
SHARE
Ad

Inaiya-Manadu-Group-Feature

கோலாலம்பூர், மார்ச் 24 – உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் (உத்தமம்) அமைப்பு, 12ஆவது உலகத் தமிழ் இணைய மாநாட்டை மலேசியாவின் முதன்மைப் பல்கலைக்கழகமான மலாயாப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து நடத்துகிறது.

மலாயாப் பல்கலைக்கழகத்தின் மொழி மொழியியல் புலம், தகவல் தொழில்நுட்ப நடுவம் ஆகியவற்றுடன் இணைந்து திதியான் டிஜிட்டல் திட்டத்தின் ஆதரவுடனும் இம்மாநாடு நடைபெறுகிறது.

#TamilSchoolmychoice

இந்த தகவல்கள் கடந்த வெள்ளிக்கிழமை மார்ச் 22ஆம் தேதி மலாயாப் பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்டன.

கணினி, இணையம் ஆகியன தொடர்பாகத் தமிழின் பயன்பாடுகள் பற்றிய ஆய்வுகள் உலகெங்கும் தமிழர்களிடையே பரவும் வகையில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக உத்தமம் அமைப்பு உலகத்தமிழ் மாநாடுகளை நடத்தி வருகிறது.

உத்தமம் உலகத்தமிழர்களை இணையத்தின் வாயிலாக இணைப்பதில் வெற்றி கண்டுள்ளது.

இதுவரை உலகளாவிய எட்டு மாநாடுகள்

இது வரை எட்டு மாநாடுகளை அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மனி, இந்தியா ஆகிய நாடுகளில் முன்னணிப் பல்கலைக் கழகங்களோடு இணைந்தும், தமிழகத்தில் மூன்று மாநாடுகளை தமிழக அரசின் முழு ஆதரவோடும் உத்தமம் நடத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த ஆண்டு கோலாலம்பூரில் உள்ள மலாயாப் பல்கலைக் கழகத்தின் ஆய்வு மேலாண்மை கண்காணிப்பு நடுவத்தில், வரும் ஆகஸ்டு 15 முதல் 18 வரை  “12ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2013”ஐ நடத்த உத்தமத்தின் செயற்குழு முடிவெடுத்துள்ளது.

உத்தமத்தின் தலைவர் சி. ம. இளந்தமிழ் (படம்) அவர்கள், மாநாட்டின் உள்ளூர்க் குழுவுக்குத் தலைமை தாங்கவிருக்கிறார். உத்தமம் அமைப்பின் முன்னாள் தலைவர் திரு மணி மு. மணிவண்ணன் அவர்கள் மாநாட்டின் பன்னாட்டுக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.

மலேசிய மாநாட்டின் சிறப்பு அம்சங்கள்

முந்தைய இணைய மாநாடுகளைப் போலவே வரும் 2013 மாநாடும் கருத்தரங்கு, கண்காட்சி, மக்கள் கூடம் என்று மூன்று முனைகளில் செயல்படும்.

ஆய்வுக் கருத்தரங்கு மற்றும் பயிலரங்கு ஆகஸ்டு 15, 16, 17 ஆகிய மூன்று நாட்களில் நடக்கவிருக்கிறது. கண்காட்சியும் மக்கள் கூடமும் ஆகஸ்டு 16, 17, 18 ஆகிய மூன்று நாட்களில் நடக்கும்.

மாநாட்டுக்குப் பதிவு செய்த பேராளர்கள் மட்டுமே கருத்தரங்கு மற்றும் பயிலரங்கில் கலந்து கொள்ளலாம். கண்காட்சியிலும் மக்கள்கூடத்திலும் பொதுமக்கள் பார்வையாளர்களாகப் பங்கேற்கலாம்.

கருத்தரங்குகளில் பல்வேறு ஆய்வாளர்கள் கணிணித் தமிழ் குறித்த தங்களின் ஆய்வுகளை ஏனைய ஆய்வாளர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள்.

மாநாட்டின் கருத்தரங்கக் குழுவுக்கு முனைவர் பத்ரி சேஷாத்திரி அவர்கள் தலைமைப் பொறுப்பு ஏற்றுள்ளார். கருத்தரங்குக் குழு மாநாட்டுக்கான ஆய்வுக் கட்டுரைகளைத் தேர்வு செய்வதுடன், கருத்தரங்குகளைச் செவ்வனே நடத்தும் பொறுப்பையும் இக்குழு வகிக்கும்.

“கையடக்கக் கணினிகளில் தமிழ்”

இவ்வாண்டின் கருத்தரங்கிற்கு “கையடக்கக் கணினிகளில் தமிழ்க் கணிமை” என்ற தலைமைக் கருத்தை ஒட்டிய ஆய்வுக்கட்டுரைகளை ஏற்பாட்டுக் குழுவினர் வரவேற்கின்றார்கள்.

இணைய மாநாடுகள் ஆய்வாளர்களின் கருத்துப் பரிமாற்றத்துக்கு வழிவகுப்பது மட்டுமல்லாமல், மக்கள் கூடத்தின் மூலம் கணித்தமிழ் நுட்பங்களைப் பரப்புதல், கணித்தமிழ் மென்பொருட்கள் மற்றும் கருவிகளைக் கண்காட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிமுகம் செய்தல் போன்ற பல்வேறு செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாண்டு மாநாட்டின் மக்கள் கூடம் மூலம் கணித்தமிழ் நுட்பங்களை இத்துறையின் வல்லுநர்கள் மற்றும் மாணவர்களிடையே பரப்புதல், பயிலரங்குகள் நடத்திக் கணித்தமிழின் நுட்பங்களைப் பயிற்றுவித்தல், கணினி வழியாகக் கற்கும் மற்றும் கற்பிக்கும் பல்வேறு முறைகளை ஆசிரியர்களிடம் பரப்புதல் போன்ற முயற்சிகளை மாநாட்டுக்குழுவினர் எடுக்கவிருக்கின்றனர்.

கடந்த ஆண்டுகளை போலவே இவ்வாண்டும் கணினித் தமிழ்ச் சங்கம் கண்காட்சி அரங்கம் ஏற்பாடுகளில் பெரும்பங்கு வகிக்கும்.

கட்டுரைகளுக்கான தலைப்புகள்

கீழ்க் காணும் தலைப்புகளில் கட்டுரைகளை ஏற்பாட்டுக் குழுவினர் வரவேற்கின்றார்கள்:-

* செல்பேசிகள் மற்றும்  கணினிகளில் முக்கியமாக ஐ.ஓ.எஸ், ஆண்டிராய்டு மற்றும் விண்டோஸ் தளங்களில் தமிழைப் படித்தல், தமிழில் எழுதுதல்.

* மின் நூல்கள், மின் இதழ்கள் ஆகியவற்றைக் கைக் கருவிகளில் கொண்டுவர  உதவும் செயலிகள் மற்றும் தொழில்நுட்பம்.

* ஐ.ஓ.எஸ், ஆண்டிராய்டு, விண்டோஸ் மற்றும் எச்.டி.எம்.எல் 5 குறுஞ்செயல்கள் (Apps).

* திறவூற்றுத் தமிழ் மென்பொருள்கள், தன்மொழியாக்கல்.

* இயன்மொழிப் பகுப்பாய்வு பிழைதிருத்தி, தமிழ் எழுத்துருபகுப்பி, ஒலி உணர்தல், தேடல்பொறிகள் , இயந்திர மொழிமாற்றம், தகவல் அகழ்தல் போன்றவை.

* தமிழ் இணையத்தின் தற்போதைய நிலை: வலைப்பதிவு, சமூக வலைத்தளங்கள், விக்கிப்பீடியா, குரல் வலை போன்றவை.

*தமிழ் தரவுத் தளங்கள்.

*கணினி வழி தமிழ் கற்றல் மற்றும் கற்பித்தல் குறித்தான ஆய்வுகள்

*தமிழ்க் கணினி சொல்லாக்க ஆய்வுகள்.

*கணினி வழி தமிழ்மொழி  பகுப்பாய்தல் மற்றும் கணினிக்கு தமிழ் மொழியறிவு ஊட்டல் பற்றிய ஆய்வுகள்.

 கட்டுரைகள் மின்னஞ்சல் மூலமாக மட்டுமே அனுப்பப்படவேண்டும். ஆய்வுச் சுருக்கங்களும் இறுதிக் கட்டுரையும் திருத்தக்கூடிய வடிவத்தில் மட்டுமே அனுப்பப்படவேண்டும்.

இவை உரைக் கோப்புகளாக, எச்.டி.எம்.எல் (HTML) வடிவில், மைக்ரோசாஃப்ட் வேர்ட் (Microsoft word) அல்லது ஓப்பன் ஆஃபீஸ் கோப்புகளாக இருக்கலாம்.

பி.டி.எஃப் (PDF) அல்லது அதுபோன்ற திருத்தமுடியாத வடிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படா. கட்டுரைகள் ஆங்கிலத்திலோ, தமிழிலோ அல்லது இரு மொழிகளும் கலந்த வகையிலோ இருக்கலாம்.

தமிழில் அல்லது இருமொழியில் இருந்தால், யூனிகோட் குறியீட்டில் மட்டுமே இருக்கலாம். பிற குறியீடுகளைக் கொண்டு அனுப்பப்படும் கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.

மாநாட்டு இதழ் ஒன்று அச்சு வடிவிலும் மின் வடிவிலும் வெளியிடப்படும்.

 ஏற்றுக்கொள்ளப்பட்டு, மாநாட்டில் நேராகப் படிக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகள் மட்டுமே மாநாட்டு இதழில் சேர்த்துக்கொள்ளப்படும். கட்டுரைகள் அனுப்புவோர் நேராக மாநாட்டுக்கு வந்து கட்டுரைகளைப் படிக்க ஒப்புக்கொள்கிறார் என்று புரிந்துகொள்ளப்படும்.

(4 பக்க அளவில்) இரு பக்கங்களுக்கு மிகாது கட்டுரைச் சுருக்கங்களை நிகழ்ச்சிகள் குழுவுக்கு cpc@infitt.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கட்டுரையாளர்கள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

 கட்டுரை வந்து சேர்ந்தது குறித்து உடனடியாக உங்களுக்கு மின்னஞ்சல் வாயிலாகத் தகவல் தெரிவிக்கப்படும். மேலும் கட்டுரைச் சுருக்கங்களை ti2013.infitt.org என்ற இணைய தளம் மூலமும் சமர்ப்பிக்கலாம். கட்டுரைச் சுருக்கங்ள் அனுப்ப இறுதி நாள் 31 மே 2013 ஆகும்.

தமிழ் குறுஞ்செயலி உலகப் போட்டி:

கையடக்கக் கணினிகளின் தொழில்நுட்பம் வளர்ந்து கொடுப்பதற்கு ஈடாகத் தமிழிலும் குறுஞ்செயலிகள் (Apps)  வளர வேண்டும் என்பதை உணர்ந்தும் மேலும் பல நிரலாளர்களைத் (programmers) கணினித்தமிழுக்கு ஈர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், தமிழுக்கான சிறந்த குறுஞ்செயலிப் போட்டி ஒன்றை அறிவிக்கிறோம்.

ஆப்பிள் ஐ-ஓஎஸ், ஆண்டிராய்டு, விண்டோஸ் 8 தளங்களுக்கான  குறுஞ்செயலிகள் போட்டியில் பங்கேற்கலாம். போட்டியைப் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு உத்தமத்தின் வலைத்தளம்  ti2013.infitt.org அணுகவும்.

மாநாடு குறித்த கூடுதல் விவரங்களுக்குக் கீழ்க்காணும் மின்முகவரிகளில் தொடர்பு கொள்ளவும்: ed@infitt.org மற்றும் chair@infitt.org

இந்த உலகத் தமிழ் இணைய மாநாட்டுக்கான செயலகம் கீழ்க்காணும் முகவரியில் செயல்படும்:-

 No 48A, First Floor

Jalan 1/19, Seksyen 1

PJ Old Town

46050 Petaling Jaya

Selangor, Darul Ehsan

 

(படம்; பத்திரிக்கையாளர் சந்திப்பில் மாநாட்டுத் தலைவர், சி.ம.இளந்தமிழ், மற்றும் ஏற்பாட்டுக் குழுவினருடன் செல்லியல் மற்றும்  செல்லினம், வடிவமைப்பாளர்  முத்து நெடுமாறன்)