புத்ராஜெயா – குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரணை செய்ய சிறப்பு குற்றவியல் நீதிமன்றம் ஒன்று இன்று வியாழக்கிழமை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கால் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
“இந்த மாதிரியான சிறப்பு நீதிமன்றம் மலேசியாவில் மட்டுமல்ல, தென்கிழக்கு ஆசியாவிலேயே இது தான் முதல் நீதிமன்றம். இதனை மெதுவாக நாட்டிலுள்ள 13 மாநிலங்களிலும் கொண்டு வர உள்ளோம்” என்று நஜிப் தனது உரையில் தெரிவித்தார்.
இந்த நீதிமன்றத்தில் வரும் ஜூலை 4-ம் தேதி முதல் வழக்கு விசாரணைக்கு வரவிருக்கின்றது. நீதி அரண்மையில் அமைந்திருக்கும் இந்த நீதிமன்றத்தில், கோலாலம்பூர், புத்ரஜெயாவில் நடக்கும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் குறித்த வழக்குகள் விசாரணை செய்யப்படும்.
மேலும், இந்த நீதிமன்றத்தில் 25 ஆண்டுகள் அனுபவமுள்ள, அமர்வு நீதிமன்ற நீதிபதிகள் பணியாற்றவிருக்கின்றனர்.
இதனிடையே, நீதிமன்றத்தின் ஒரு பகுதியில் அமைந்திருக்கும் சிறப்பு காத்திருப்பு அறையை பிரதமரின் மனைவி டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மான்சோர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மூத்த நீதிபதி டான்ஸ்ரீ முகமது ராவுஸ் ஷரிஃப், நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் மற்றும் பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அசலினா ஒத்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
படம்: நன்றி (The Star)