கோலாலம்பூர் – கடந்த பிப்ரவரி மாதம் முதல் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுத் தேடப்படும் பாதிரியார் ரேமண்ட் கோ கெங் ஜூ (படம்றி) குறித்த புதிய விவரங்கள் காவல் துறையினருக்குக் கிடைத்திருக்கின்றன.
நாட்டின் எல்லைப் பகுதியில் போதைப் பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் கும்பல் ஒன்றின் மூன்று உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்களிடத்தில் பாதிரியார் ரேமண்ட் குறித்த ஆவணங்கள், புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக காவல் துறைத் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார் தெரிவித்திருக்கிறார்.
கடந்த ஜூன் 17-ஆம் தேதி கெடா கம்போங் வெங் டாலாம் என்ற இடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய காவல் துறையினர், கள்ளக் கடத்தல் கும்பலில் முக்கியத் தலைவன் எனக் கருதப்படும் நபரை சுட்டுக் கொன்றனர்.
அதைத் தொடர்ந்து கிடைத்த ஆதாரங்களைப் பின்பற்றி கோத்தாபாருவில் ஒருவன், கோலகங்சாரில் ஒருவன் மற்றும் குவாந்தானில் ஒருவன் என இதுவரை மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்திருக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் வீட்டில் அதிரடி சோதனைகள் நடத்தியபோது அங்கு போதைப் பொருள், வெடிகுண்டுகள், ஆயுதங்கள் ஆகியவற்றோடு காணாமல் போன 62 வயது பாதிரியாரின் வீடு மற்றும் கார் ஆகியவற்றின் புகைப்படங்களும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.
இது எதிர்பாராமல் காவல் துறைக்குக் கிடைத்திருக்கும் ஆதாரங்களாகக் கருதப்படுகின்றது.
இந்தக் கடத்தல் கும்பல்தான் பாதிரியார் ரேமண்டின் கடத்தலிலும் சம்பந்தப்பட்டிருக்கிறது என காவல் துறையினர் நம்புகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மலேசிய மற்றும் தாய்லாந்து குடியுரிமை கொண்டவர்கள் என்றும் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து பாதிரியார் ரேமண்ட் தொடர்பான மேலும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.