சென்னை – நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கப் போகும் முதல் வணிக ரீதியான தொலைக்காட்சி நிகழ்ச்சி என்பதால் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி அலைவரிசையின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்காக கமலுக்கு கோடிக்கணக்கான ரூபாய் சம்பளமாக வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன.
நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி தொடங்கியது.
இந்த நிகழ்ச்சி ஒருநாள் தாமதமாக இன்று முதல் மலேசியாவின் அஸ்ட்ரோ 224 அலைவரிசையில் ஒளிபரப்பாகிறது.
இந்த நிகழ்ச்சியில் இதுவரையில் 14 பிரபலங்கள் கலந்து கொள்ளப் போகிறார்கள் எனக் கூறப்பட்டு வந்தது.
ஆனால், நேற்றைய நிகழ்ச்சியில், இறுதி நேர இணைப்பாக நடிகை நமிதாவும் இணைந்து கொள்ள மொத்தம் 15 பிரபலங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
இவர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சிக்கென பிரத்தியேகமாக நிர்மாணிக்கப்பட்ட மாளிகையில் மூன்றரை மாதங்கள் தொடர்ந்து ஒன்றாகத் தங்கியிருப்பர். வெளியே செல்ல முடியாது. கைத்தொலைபேசிகள் பயன்படுத்த முடியாது. தொலைக்காட்சி கிடையாது.
இவர்களில் யார் அதிக காலம் தாக்குப் பிடிக்கப் போகிறார்கள் என்பதுதான் “ரியலிடி ஷோ” எனப்படும் இந்த நிகழ்ச்சியின் மைய இழையாகும்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறும் 15 பிரபலங்கள் நேற்று கமலஹாசனால் முதல் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டனர். அவர்கள் பின்வருமாறு:
- நடிகை அனுயா
- நடிகர் வையாபுரி
- கவிஞர் சிநேகன்
- நடிகர் கணேஷ் வெங்கட்ராம்
- நடிகர் பரணி (நாடோடி படத்தில் நடித்தவர்)
- நடிகை நமீதா
- நடிகை ஓவியா
- நடிகர் ஸ்ரீ (ஓநாயும் ஆட்டுக் குட்டியும், மாநகரம் படங்களில் நடித்தவர்)
- காயத்ரி ரகுராம் (நடிகையும், நடன இயக்குநர்)
- ரைசா வில்சன் (விளம்பர அழகி – மாடல்)
- ஆர்த்தி கணேஷ் (நகைச்சுவை நடிகை)
- கஞ்சா கருப்பு (நகைச்சுவை நடிகர்)
- ஜூலியானா (இவர் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது சசிகலாவைப் பற்றி சர்ச்சையான கருத்துகள் கூறி சமூக ஊடகங்களில் அதிகமாகப் பேசப்பட்டவர்)
- ஆரர் (இவரும் ஒரு ஆண் மாடல்)
- சக்தி வாசு (நடிகர் – இயக்குநர் வாசுவின் மகன்)