புதுடெல்லி – கடந்த சில மாதங்களுக்கு முன்பு, டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்து முறையிட, தமிழக விவசாயிகள் சென்ற போது, அங்கு மோடி அவர்களைச் சந்திக்க அனுமதி வழங்காததால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பல நாட்கள் பிரதமர் அலுவலகம் முன்பு, நிர்வாணப் போராட்டம், எலிக்கறி சாப்பிட்டு போராட்டம் என பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
ஆனால், பிரதமர் தரப்பிலிருந்து எந்த ஒரு தீர்வும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக உறுதியளித்தார். அதனை அடுத்து அவர்கள் அனைவரும் தமிழகம் திரும்பினர்.
ஆனால் பழனிசாமி சொன்னபடி இன்னும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால், அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் குழு மீண்டும் டெல்லி நோக்கிப் புறப்பட்டது.
இது குறித்து அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் பேசுகையில், “விவசாயிகளின் பிரச்சினைக்கு தமிழக அரசு இன்னும் தீர்வு காணவில்லை என்பதால், எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி நாங்கள் 50 பேர் டெல்லி சென்று ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தவிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.