ஸ்டாக்ஹோம்: புது டில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் அண்மையில் குரல் கொடுத்திருந்தார். அதனால், அவர் மீது டில்லி காவல் துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.
அதற்கு பதிலளித்த கிரெட்டா, “நான் இன்னும் விவசாயிகளுடன் நிற்கிறேன், அவர்களின் அமைதியான போராட்டத்தை ஆதரிக்கிறேன். எந்தவொரு வெறுப்பு, அச்சுறுத்தல்கள் அல்லது மனித உரிமை மீறல்கள் ஒருபோதும் அதை மாற்றாது,” என்று தெரிவித்துள்ளார்.
கிரெட்டவைத் தொடர்ந்து அனைத்துலக பாடகி ரிஹானா, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் உறவினர் மீனா ஹாரிஸ் உள்ளிட்ட பலரும் டுவிட்டரில் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
“இந்தியாவில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாங்கள் ஒற்றுமையுடன் நிற்கிறோம்,” என்று கிரெட்டா டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். மேலும், விவசாயிகளுக்கு உதவ நினைப்பவர்கள் செய்ய வேண்டியவை குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஆவணம் ஒன்றையும் அவர் இணைத்துள்ளார்.
நிலைமையை மேலும் மோசமடையச் செய்யவும், போராட்டத்தைத் தூண்டவும் தவறான தகவல்களை பகிர்ந்ததால், குற்றவியல் மற்றும் சமூகங்களுக்கு இடையே வெறுப்பை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கிரெட்டா துன்பெர்க் மீது டில்லி காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.