கோலாலம்பூர்: முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டோமி தோமஸ் சமீபத்தில் வெளியிட்ட புத்தகமான ‘மை ஸ்டோரி: ஜஸ்டிஸ் இன் தி வைல்டர்னஸ்’ என்ற நினைவுக் குறிப்பை உள்துறை அமைச்சகம் ஆராய்ந்து வருகிறது.
பெயரிட மறுத்த அமைச்சகத்தின் வட்டாரம், புத்தகத்தை தடைசெய்யும் வாய்ப்பை நிராகரிக்கவில்லை.
உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடினுக்கு சமர்ப்பிக்க ஓர் அறிக்கையை அமலாக்க மற்றும் கட்டுப்பாட்டு பிரிவு தயாரித்து வருவதாக அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
“புத்தகத்தை தடை செய்ய உத்தரவிட அமைச்சருக்கு அதிகாரம் உள்ளது,” என்று அது கூறியுள்ளது.
டோமி தோமஸ் வெளியிட்ட இந்த புத்தகம் தொடர்பாக , முன்னாள் சட்டத்துறை தலைவர் முகமட் அபாண்டி அலி மற்றும் வழக்கறிஞர் முகமட் ஹனாபியா சகாரியா உள்ளிட்ட பல தரப்பினர் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.
அதிகாரப்பூர்வ இரகசியங்கள் சட்டத்தின் (ஓஎஸ்ஏ) கீழ் டோமி தோமஸ் மீது அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சிலாங்கூர் காவல் துறைத் தலைவர் பாட்சில் அகமட் கூறுகையில், டோமி தோமஸ் தனது வாக்குமூலத்தை விரைவில் வழங்க அழைக்கப்படுவார் என்று கூறியுள்ளார்.