கோலாலம்பூர் – 1 எம்டிபி தொடர்பில் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் மற்றும் சட்டத் துறைத் தலைவர் அபாண்டி அலி (படம்) இருவருக்கும் இடையில் மூண்டிருக்கும் வாக்குவாதம் மத ரீதியான திருப்பம் காணத் தொடங்கியிருக்கிறது.
“நான் கடவுளுக்கு மட்டுமே பயப்படுபவன்” என்று கூறிக் கொள்ளும் அபாண்டி அலி, பிரதமர் நஜிப்பின் சொந்த வங்கிக் கணக்குக்கு வந்த 2.6 பில்லியன் தொடர்பில் அரசு இலாகாக்கள் நஜிப் தவறு செய்தார் எனக் கூறவில்லை என புனித குர்ஆன் மீது சத்தியம் செய்யத் தயாரா என மகாதீர் சவால் விடுத்துள்ளார்.
“பேங்க் நெகாரா என்ற மத்திய வங்கி, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், தலைமை கணக்குத் தணிக்கையாளர் ஆகியோர் சமர்ப்பித்த அறிக்கைகளை அபாண்டி அலி பகிரங்கப்படுத்தவில்லை என்பதால் அவர் கடவுளுக்கு பயப்படவில்லை என்பது தெரிகிறது. இந்த அறிக்கைகள் பொதுமக்கள் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டது. அபாண்டி கூறியது உண்மையல்ல” என்றும் மகாதீர் கூறியிருக்கிறார்.
“அபாண்டி பொய் கூறியிருக்கிறார் என்பது கடவுளுக்கே தெரியும். நஜிப்பை நீதிமன்றங்களில் இருந்து காப்பதற்கு அபாண்டி முயற்சி செய்கிறார். இது ஒருவகையான ஏமாற்று வேலை என்பதோடு, நீதிமன்றங்களில் வழக்குத் தொடுக்கும் அதிகாரம் கொண்டவர் செய்யும் நம்பிக்கை மோசடி இதுவாகும்” என்றும் கடுமையாகச் சாடியிருக்கும் மகாதீர் தனது இந்தப் பதிவை தனது வலைத் தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
தன்னை உண்மையானவராகக் காட்டிக் கொள்ள பேங்க் நெகாரா, ஊழல் தடுப்பு ஆணையம், மலேசியக் கணக்குத் தணிக்கையாளர் ஆகியோர் வழங்கிய அறிக்கைகளில் நஜிப் குற்றமற்றவர் எனக் கூறப்பட்டிருக்கிறது என்று பள்ளிவாசல் ஒன்றில் அபாண்டி அலி புனித குர்ஆன் மீது சத்தியம் செய்ய முன்வர வேண்டும் என்றும் மகாதீர் சவால் விடுத்திருக்கிறார்.