Home Featured நாடு சங்கப் பதிவக முடிவுகளுக்கு ஜசெக எதிர்ப்பு

சங்கப் பதிவக முடிவுகளுக்கு ஜசெக எதிர்ப்பு

1121
0
SHARE
Ad

lim guan eng-press-conf-19072017கோலாலம்பூர் – நேற்று புதன்கிழமை நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் சங்கப் பதிவகம் அனுப்பியுள்ள கடிதத்தில் கண்டுள்ள குற்றச்சாட்டுகளை ஜசெகவின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் மறுத்துள்ளார்.

சுதந்திரமான தணிக்கையாளர்கள் பரிசோதித்து 2013-இல் நடைபெற்ற தேர்தல் முறையாக நடந்தது என்றும், வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர் என்றும் குவான் எங் தெரிவித்திருக்கிறார்.

இதன் காரணமாக, சங்கப் பதிவகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி விளக்கம் அளிக்கத் தாங்கள் தயாராக இருப்பதாகவும், ஜசெக சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

#TamilSchoolmychoice

எனினும், திங்கட்கிழமை முதல் தாங்கள் சங்கப் பதிவகத்துடன் தொடர்பு கொண்டு, சந்திக்க நேரம் தரும்படி வேண்டுகோள் விடுத்தும் இன்றுவரை தங்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என ஜசெகவின் மத்திய செயலவை உறுப்பினர் அந்தோணி லோக் இதே பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அதே வேளையில் மீண்டும் தேர்தலை நடத்துவதற்கு ஜசெக அஞ்சவில்லை என்றும் ஆனால், 2012-ஆண்டு பேராளர்கள் அல்லாமல், 2017-ஆம் ஆண்டுக்கான பேராளர்கள் கொண்ட பட்டியலைக் கொண்டு தேர்தலை நடத்தத் தாங்கள் தயாராக இருப்பதாகவும் லிம் குவான் எங் தெரிவித்தார்.

கடந்த ஜூலை 7-ஆம் தேதி சங்கப் பதிவகம் ஜசெகவின் 2013-ஆம் ஆண்டுக்கான கட்சித் தேர்தலை இரத்து செய்து அந்தத் தேர்தல்  மீண்டும் நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டது. தொடர்ந்து இதற்கான கடிதம் ஜசெகவுக்குக் கிடைக்கப் பெற்றதாக ஜசெக சட்டப் பிரிவுத் தலைவர் கோபிந்த் சிங் டியோ அறிவித்திருந்தார்.

லிம் குவான் எங்கின் நேற்றைய அறிவிப்புகளைத் தொடர்ந்து சங்கப் பதிவகத்துடன் சுமுகமான பேச்சு வார்த்தை நடத்தி ஜசெக மறு தேர்தலை நடத்துமா அல்லது சங்கப் பதிவகத்தின் முடிவுகளை எதிர்த்து நீதிமன்றம் செல்லுமா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பொதுத் தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஜசெக உட்கட்சித் தேர்தல்களை நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருப்பது அந்தக் கட்சிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவாகக் கருதப்படுகின்றது.