கோலாலம்பூர் – ஆர்எம்எஸ் சரா இயக்கத்தில், அவரே நடிகர் பென்ஜியுடன் இணைந்து நடித்திருக்கும் ‘மாமா மச்சான்’ என்ற திரைப்படம் நேற்று வியாழக்கிழமை நாடெங்கிலும் 18 திரையரங்குகளில் வெளியீடு கண்டது.
கதைப்படி, காசி (பென்ஜி), குரு (ஆர்எம்எஸ் சரா) மோட்டார் சைக்கிள்களைத் திருடி அதை நடிகர் ஜகனிடம் கொண்டு போய் கொடுத்து அதில் வரும் வருமானத்தில் ஜாலியாக வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு இருக்கின்றனர்.
இப்படி சின்னச் சின்ன திருட்டு வேலைகள் மட்டும் செய்தவர்கள் மீது திடீரென ஒரு கொலைப் பழி விழுகின்றது. அதனால் போலீஸ் துரத்த ஆரம்பிக்கிறது. அந்தப் பழி விழ யார் காரணம்? அந்தக் கொலையின் பின்புலம் என்ன என்பது தான் இரண்டாம் பாதி சுவாரசியம்.
படத்தில் பென்ஜி, ஆர்எம்எஸ் சரா இருவரின் இயல்பான நடிப்பும், காமெடியும் ரசிக்க வைக்கின்றது. நடிகைகளில் ஷாமினி, கல்பனாஸ்ரீ, நித்யா ஆகியோரின் நடிப்பு சிறப்பாக இருக்கின்றது.
வில்லனாக ஜகன், எம்சிவா, லிங்கேஸ் ஆகியோர் கூட்டணி நன்றாக நடித்திருக்கிறார்கள். போலீசாக லோகநாதன் வரும் காட்சிகளில் அவரது நடிப்பும், உடல்மொழியும் மிக எதார்த்தமாக இருக்கின்றது. பிளாஷ்பேக்கில் வரும் நடிகர் அகோந்திரனின் நடிப்பும் மிக இயல்பாக இருக்கின்றது.
ஹீரோவாக பென்ஜி, வில்லனாக ஜெகன், போலீசாக லோகநாதன் என மூன்று முக்கியக் கதாப்பாத்திரங்களுக்கும் மலேசிய ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான, அதே நேரத்தில் நடிப்பில் அனுபவம் வாய்ந்த நடிகர்களை நடிக்க வைத்திருப்பது தான் படத்திற்கு பக்க பலம் சேர்த்திருக்கிறது.
மற்றபடி, திரைக்கதை அமைப்பில், வசனங்களில், காட்சிப்படுத்திய விதத்தில் இன்னும் பல இடங்களில் அழுத்தமும், சுவாரசியமும் கூட்டியிருந்தால் படம் ஒரு நல்ல காமெடியுடன் கூடிய திரில்லர் படமாக அமைந்திருக்கும்.
ஸ்டீபன் ராமச்சந்திரன் ஒளிப்பதிவில் கோலாலம்பூரின் பிரிக்பீல்ட்ஸ் உட்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காட்சிகள் இயல்பாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. மனீசெர் சிங் இசையில், சைக்கோ மந்திரா பாடும் ‘சாரு சாரு சாரி மக்கான்’ பாடல் ரசிக்க வைக்கின்றது.
வசனங்களில், “ஏண்டா.. பார்வையற்றவர்கள் கூட மசாஜ் செஞ்சு பிழைக்கிறார்கள். மாற்றுத்திறனாளிகள் கூட திஸ்யூ பேப்பர் விற்று பிழிக்கிறார்கள். உனக்கு கை கால் நல்லா தானே இருக்கு. அப்புறம் எதுக்கு இந்த திருட்டுத் தொழில்” என்ற ஒரு வசனம் மலேசியச் சூழலை அப்படியே பிரதிபலிப்பதோடு, திருடர்கள் தலையில் நச்சென்று குட்டுவது போல் அமைந்திருக்கிறது. இது போல் இன்னும் பல நல்ல வசனங்களில் படத்தில் இணைத்திருக்கலாம்.
– ஃபீனிக்ஸ்தாசன்