மும்பை – மும்பை அந்நேரி பகுதியைச் சேர்ந்த ஆஷா (வயது 63), தனது கணவர் இறந்த பின்பு, தனது மகனைப் படிக்க வைத்து, கடந்த 1997-ம் ஆண்டு அமெரிக்கா அனுப்பி வைத்தார்.
ஆஷாவின் மகன் ருத்துராஜ் அமெரிக்காவில் மென் பொறியியலாளராகப் பணியாற்றி வருகின்றார்.
இந்நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு, மும்பை அந்நேரி பகுதியில் உள்ள பெல்ஸ்காட் என்ற அடுக்குமாடிக் குடியிருப்பின் 10-வது மாடியில் வீடு எடுத்து, தனது தாயாரை அங்கே தங்க வைத்து விட்டு அமெரிக்கா சென்றுவிட்டார் ருத்துராஜ்.
ஆனால், அவ்வீட்டில் தனியாக வசித்து வந்த ஆஷா, பல முறை தனது மகனிடம் தன்னால் இங்கு தனியாக வசிக்க முடியவில்லை என்று அழுது புலம்பியிருக்கிறார்.
என்றாலும், அமெரிக்காவை விட்டு வர விரும்பாத ருத்ராஜ், அதனை அலட்சியப்படுத்திக் கொண்டே இருந்திருக்கிறார்.
இந்நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், தனது தாயாருடன் கடைசியாகப் பேசிய ருத்துராஜ், அதன் பின்னர் பணிச் சுமை காரணமாக, ஓர் ஆண்டுக்கும் மேலாக பேசாமல் இருந்திருக்கிறார்.
இதனிடையே, இரண்டு நாட்களுக்கு முன்பு, இந்தியா திரும்பிய அவர், தாயார் வசித்து வரும் அடுக்குமாடிக் குடியிருப்பிற்குச் சென்று கதவைத் தட்டியிருக்கிறார்.
வெகுநேரம் கதவைத் தட்டியும் தாயார் கதவைத் திறக்காததால், அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்து, அதிகாரிகளின் உதவியோடு கதவைத் திறந்து பார்த்திருக்கிறார்.
அங்கு அவரது தாயார் ஆஷா படுக்கையில் இறந்து, எலும்புக் கூடாகக் கிடந்ததைக் கண்டு ருத்துராஜ் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்.
ஆஷா பல நாட்களுக்கு முன்பே இறந்திருக்க வேண்டும் என்று காவல்துறையினர் கருதுகின்றனர். அதோடு, ஆஷா இறந்தது பக்கத்து வீட்டாருக்குக் கூட தெரியவில்லை என்பது தான் மிகப் பெரிய சோகம்.