குவாந்தான் – நேற்று செவ்வாய்க்கிழமை, பிரபல சுற்றுலாத் தளமான கெந்திங் மலையில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில், தென்கொரியாவைச் சேர்ந்த 92 வயது மூதாட்டி கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
நேற்று காலை 8.40 மணியளவில் ஷியாங் லியான் ஜின் என்ற அந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டுக் கிடந்தது கண்டறியப்பட்டிருக்கிறது.
17 மணி நேரத்திற்கு முன்னதாக அம்மூதாட்டி தங்கியிருந்த அறைக்கு கத்தியுடன் மர்ம நபர் ஒருவர் நுழைந்திருப்பதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இது குறித்து பெந்தோங் காவல்துறைத் தலைவர் முகமது மான்சோர் கூறுகையில், “திங்கட்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில், அம்மூதாட்டி தனது மலேசிய உதவியாளருடன் அறையில் இருக்கும் போது, 57 வயதான அந்த சந்தேக நபர் அறைக்குள் நுழைந்திருக்கிறார். அவர்கள் இருவரையும் கத்தி முனையில் மிரட்டிய அந்நபர், இருவரையும் கை கால்களைக் கட்டியிருக்கிறார்”
“பின்னர் அந்நபர் மூதாட்டியை அடித்திருக்கிறார். மேலும், தன்னிடம் தகாத வார்த்தைகள் பேசும் அம்மூதாட்டியின் மூத்த மகன் மீது தான் மிகவும் அதிருப்தியடைந்திருப்பதாகவும் அந்நபர் கூறியிருக்கிறார். பின்னர் மூதாட்டியை குளியலறைக்கு இழுத்துச் சென்று உள்ளே பூட்டி வைத்துவிட்டு, அதிகாலை 7 மணியளவில் தங்கும்விடுதியை விட்டுத் தப்பிச் சென்றிருக்கிறார்” என்று முகமது மான்சோர் தெரிவித்திருக்கிறார்.
அம்மூதாட்டியின் மலேசிய உதவியாளரும், இச்சம்பவத்தில் காயமடைந்திருப்பதாக நம்பப்படுகின்றது.
தற்போது, இச்சம்பவத்தை குற்றவியல் சட்டம் பிரிவு 302-ன் கீழ் கொலை வழக்காகப் பதிவு செய்திருக்கும் காவல்துறையினர், தப்பித்துச் சென்ற சந்தேக நபரைத் தேடி வருகின்றனர்.