Home கலை உலகம் திரைவிமர்சனம்: தரமணி – எதார்த்தத்தை மிக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது!

திரைவிமர்சனம்: தரமணி – எதார்த்தத்தை மிக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது!

1361
0
SHARE
Ad

Tharamaniகோலாலம்பூர் -ஹீரோ என்றால் இப்படி தான் இருப்பான், ஹீரோயின் என்றால் இப்படி தான் இருப்பாள் என்ற தமிழ் சினிமா இலக்கணங்களையெல்லாம் உடைத்தெறிந்துவிட்டு, இன்றைய காலத்தில், நிஜ வாழ்வில் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான உறவும், உணர்வுப் போராட்டங்களும் எப்படி இருக்கின்றன? என்பதை எந்த ஒரு சமரசமும் செய்யாமல் அப்பட்டமாக அப்படியே சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராம்.

ஓரினச்சேர்க்கை ஆசை கொண்ட கணவரைப் பிரிந்து வாழும் ஆண்ட்ரியா வழிப்போக்கனாக வரும் வசந்த் ரவியுடன் ஒரு புதிய உறவைத் தேடிக் கொள்வது, சாதாரண பெண்ணாக இருந்து அமெரிக்கா போனவுடன் ஆளே மாறிப் போகும் அஞ்சலி, கணவனுக்குப் பார்த்துப் பார்த்து பணிவிடை செய்தாலும் தனக்குள் ஒரு சபலத்தை ஒளித்து வைத்திருக்கும் ‘வீனஸ்’ கதாப்பாத்திரம், அன்பிற்காக, பேச்சுத்துணைக்காக ஏங்கும் போலீஸ்காரனின் மனைவி கதாப்பாத்திரம், பல்லை இளித்துக் கொண்டு சர்வ சாதாரணமாக படுக்கைக்கு அழைக்கும் முதலாளி கதாப்பாத்திரம், கணவனை உட்காரவைத்துக் கொண்டே பப்பில் வேறொரு ஆணுடன் ஆட்டம் போடும் தோழி கதாப்பாத்திரம் என இன்னும் பல சுவாரசியமான கதாப்பாத்திரங்களை கதையில் புகுத்தியிருக்கிறார் ராம்.

Tharamani1இக்கதாப்பாத்திரங்கள் மூலம் ஆணாதிக்கம், பெண் சுதந்திரத்தினால் ஏற்படும் பிரச்சினைகள், ஐடி வாழ்க்கை முறை, ஆண்களின் சந்தேக உணர்வு, ஏரிகளை மூடி வீடமைப்பாக்குவது, வடநாட்டு ஊழியர்கள் பிரச்சினைகள் எனப் பல விசயங்களை ஃபேஸ்புக், டுவிட்டர் ஸ்டேடஸ் போல் ஆங்காங்கே கதையினூடே சொல்லியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

அதற்கு ஏற்ப, ஆண்ட்ரியாவும் அன்பு, தாய்மை, காதல், வெறுப்பு என உணர்வுகளை மிக அழகாக வெளிப்படுத்தி மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அப்பாவியாக, கோபக்காரனாக, சந்தேகப் பிராணியாக வசந்த்ரவியின் நடிப்பும் அருமை. அப்படியே இயக்குநர் ராமைப் பார்ப்பது போல் தோன்றியது.

அம்மா ‘பிட்ச்னா’ என்னம்மா? என்று கேட்பதாகட்டும், அப்பா, அம்மாவின் சண்டையைப் பார்த்து அதிர்ச்சியில் நிற்பதாகட்டும் சிறுவனின் நடிப்பு அபாரம்.

Tharamani3இரயில்வே போலீசாக மனைவியை எண்ணி உருகும் அழகம்பெருமாள், திருமண மோதிரத்தைத் தொலைத்துவிட்டு போலீஸ்காரனின் ஆசைக்கு இணங்கத் தயாராகும் பணக்காரவீட்டுப் பெண், ‘சுடுடா.. சுடுடா..” என்று கணவனிடம் மல்லுக்கட்டும் குடும்ப மாது என ஆச்சரியமும், அதிர்ச்சியும் அளிக்கும் வகையில் மற்ற நடிகர்களின் நடிப்பும் மிகத் தத்ரூபமாக இருக்கிறது.

கதைக்கேற்ப வசனங்களும் மிகக் கூர்மையாகப் பாய்கிறது. அதிலும், இடையிடையே ராம் சொல்லும் குரல் வழி அறிவிப்புகள் சவுக்கடி வசனங்கள்.

“நான் கூவத்தைக் கடந்து தான் வரணும். ஆனா நான் நாத்தமடிக்கிற ஆள் கிடையாது, “உங்க கால் நல்லா தாங்க இருக்கு. அதுவும் அந்த முட்டி, கனுக்கால் எல்லாமே”, “அவனுக்கு எப்படி டீ உன் சைஸ் தெரியும்?”, “கல்யாணம் ஆன தமிழ்நாட்டுப் பொண்ணுக்கு எங்க 28 இன்ச் இடுப்பு இருக்கு?” இப்படியாக கத்தரி போடாத பல வசனங்களும் இடம்பெற்றிருக்கின்றன.

என்றாலும், பெண்களைப் படுக்கைக்கு அழைப்பதைப் பிரதானப்படுத்தி, அதைப் பற்றியே பல காட்சிகளில் வசனங்களை பேச வைத்திருப்பதால் சற்று எரிச்சல் ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை.

கதையைப் பொறுத்தவரைக்கும் இப்படித் தான் என்ற இலக்கணம் இன்றி, அன்றாடம் நாம் பார்க்கும் சம்பவங்களின் அடிப்படையில் நகர்த்தப்பட்டிருக்கிறது. அவற்றில் எங்காவது ஒரு வகையில் பார்வையாளர்கள் தங்களைப் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடியும்.

தேனி ஈஸ்வரனின் ஒளிப்பதிவில் சென்னை கவிதையாகத் தெரிகின்றது. மழை காட்சிகள், இரவுக் காட்சிகள், போக்குவரத்து நிறைந்த சாலைகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், ஏரிகள் என பல காட்சிகள் மனதில் பதிந்துவிடுகின்றன.

யுவனின் பின்னணி இசை, பல இறுக்கமான காட்சிகளை சற்று இளைப்பாறிவிட்டுக் கடப்பதற்கு ஏற்றவாறு மிக அழகாக அமைந்திருக்கிறது. கதையோடு பின்னிப் பிணைந்த பாடல்கள் இருப்பது போலவே தெரியாது. ஆனால் ரசிக்கும் படி இருக்கிறது.

மொத்தத்தில் ‘தரமணி’ – தமிழ் சினிமா இலக்கணத்தை உடைத்து ஆண், பெண் இருபாலருக்கும் இடையிலான உறவுச் சிக்கல்களை காலத்திற்கு ஏற்றவாறு மிக எதார்த்தமாகப் பதிவு செய்து ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது.

-ஃபீனிக்ஸ்தாசன்