புத்ரா ஜெயா – துன் மகாதீர் முகமட் பிரதமராக இருந்த காலகட்டத்தில், 1990-ஆம் ஆண்டுகளில் பேங்க் நெகாரா (மத்திய வங்கி) சந்தித்த அந்நிய செலாவணி நஷ்டங்கள் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட அரச விசாரணை ஆணையம் திங்கட்கிழமை (21 ஆகஸ்ட்) முதல் தனது விசாரணைகளைத் தொடங்கவிருக்கிறது.
இந்த அரச விசாரணை ஆணையத்தின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்க வேண்டுமென துன் மகாதீர் நீதிமன்றத்தில் செய்துகொண்ட விண்ணப்பத்தை மூன்று நீதிபதிகள் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு நேற்று வெள்ளிக்கிழமை நிராகரித்தது.
பொதுமக்களின் நலனுக்காக இந்த அரச விசாரணை ஆணையம் தனது விசாரணைகளைத் தொடர வேண்டும் என மேல்முறையீட்டு நீதிமன்றம் கூறியதைத் தொடர்ந்து, திங்கட்கிழமை முதல் இந்த ஆணையம் தனது செயல்பாடுகளைத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
1990-ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த பில்லியன் கணக்கான அந்நியச் செலாவணி நஷ்டங்களுக்கு அப்போதைய பிரதமர் துன் மகாதீர்தான் காரணம் என்ற குற்றச்சாட்டை மையமாகக் கொண்டு இந்த அரச விசாரணைக் குழு விசாரணை நடத்தும்.
நஜிப் தலைமைத்துவத்திற்கு எதிராக நாடு தழுவிய அளவில் மாபெரும் அரசியல் போராட்டத்தை நடத்தி வரும் மகாதீருக்கு எதிரான அரசியல் ஆயுதமாகவும், மகாதீரின் ஆட்சிகாலத் தோல்விகளை எடுத்துக் காட்டும் வண்ணமும் இந்த அரச விசாரணைகள் அமையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் அரச விசாரணை ஆணையத்தின் ஐந்து உறுப்பினர்களில் இரண்டு பேரை நீக்க வேண்டும் என மகாதீர் செய்துகொண்ட விண்ணப்பமும் நீதிமன்றத்தில் இன்னும் விசாரணையில் இருந்து வருகிறது.