கிள்ளான் – சுகாதாரமின்மை காரணமாக தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் உள்ள உணவகம் மூடப்பட்டது.
சில நாட்களுக்கு முன் அந்த உணவகத்தின் உணவுகள் அடுக்கப்பட்டிருக்கும் மேசையில், எலி ஒன்று உணவுகளைக் கொறித்துக் கொண்டிருந்த காணொளி பேஸ்புக், வாட்சாப் உள்ளிட்ட நட்பு ஊடகங்களில் பரவியது.
இதனைக் கண்டு பலரும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், உணவகங்கள் கட்டாயமாக சுகாதாரத்தைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக மருத்துவமனைகளில் உள்ள உணவகங்கள் சுகாதாரத்திற்கு மிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், அக்காணொளி குறித்து கூறுகையில், எலியின் சிறுநீர் மிகப் பெரிய ஆரோக்கியப் பிரச்சினையை ஏற்படுத்தும் என பொதுமக்களின் பாதுகாப்பை முன்னிட்டு, அனைத்து உணவகங்களும் சுத்தமாக நடத்தப்பட்டு, எலிகள் அற்ற பகுதியாக மாற வேண்டும். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.