கோலாலம்பூர் – மாலத்தீவில் நடைபெற்ற ஆவணத் தொகுப்பிற்கான ஆசியப் பசிபிக் விருது விழாவில், மின்னல் பண்பலையின் அறிவிப்பாளர் தெய்வீகன் தாமரைச் செல்வன் உருவாக்கிய ஆவணத் தொகுப்பான ‘வெளிச்சம் – ஈழத்தமிழர்கள் பற்றிய கதை’ சிறந்த தொகுப்பாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் அனைத்துலக அரங்கில் மின்னல் பண்பலையும், அதன் அறிவிப்பாளர் தெய்வீகன் தாமரைச் செல்வனும் சாதனை படைத்திருக்கின்றனர்.
கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டத்தோ எம்.சரவணன் தலைமையிலான குழு ஒன்று, இலங்கையில் ஈழத்தமிழர்களைச் சந்திக்கச் சென்றிருந்தது. அக்குழுவில் மின்னல் பண்பலை அறிவிப்பாளர் தெய்வீகனும் ஒருவர்.
அந்தப் பயணத்தில் ஈழத்தமிழர்களைச் சந்தித்த தெய்வீகன், அவர்களின் தற்போதைய நிலையைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து ஒரு ஆவணத் தொகுப்பாக உருவாக்கினார்.
அதனை கடந்த ஆண்டு தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளிலும் ஒலியேற்றினார். அந்நிகழ்ச்சி மலேசியர்கள் பலரையும் கவனிக்க வைத்தது.
ஆவணத்தொகுப்பு
சுமார் 30 நிமிடங்களுக்கான தகவல்கள் தொகுக்கப்பட்டு ஒலியேற்றப்பட்ட அந்த ஆவணத் தொகுப்பில், இலங்கையில் ஏற்பட்ட போர், போரினால் ஏற்பட்ட விளைவுகள், போருக்குப் பின்னர் அங்கிருந்து வெளியேறிய அகதிகளாகச் சென்ற மக்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்கள்? போன்ற கேள்விகளுக்கான பதில்கள் இடம்பெற்றிருந்தன.
மேலும், ஐ.நாவின் ஆதரவோடு, மலேசியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கை அகதிகள், சுவிட்சர்லாந்து அரசியலில் ஈடுபட்டிருக்கும் இலங்கைத் தமிழர்களின் குரல்கள், லண்டனில் தமிழர்களின் புகழ் பாடும் ராப் இசைக்கலைஞர் எம்.சி.சாய் உள்ளிட்டோர் இந்த ஆவணத் தொகுப்பில் பேசியிருக்கின்றனர்.
இந்நிலையில், ஆவணத் தொகுப்பிற்கான ஆசியப் பசிபிக் விருது ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வானொலி மற்றும் தொலைக்காட்சி ஆவணத் தொகுப்புகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில், தெய்வீகன் தொகுத்த ஆவணத்தொகுப்பு இந்த ஆண்டு, சிறந்த நிகழ்ச்சிக்கான விருது பெற்றிருக்கிறது.
மின்னலைப் பொறுத்தவரையில், பல துடிப்பான, புதுமையான நிகழ்ச்சிகளில் தெய்வீகனின் பங்களிப்பு அதிகமாக இருக்கும். எதையும் நுட்பமாக ஆராய்ந்து, அதனை மக்களுக்கு எளிமையாகப் புரியும் வகையில் தொகுத்து வழங்கும் ஆற்றல் பெற்றவர் தெய்வீகன்.
எம்எச்370 விமானம் மாயமான போது, அது பற்றியத் தகவல்களை உடனுக்குடன் மக்களுக்குத் தெரிவிக்க, தேடுதல் குழுவினருடன் துணிச்சலாக ஆழ்கடலில் பயணித்து செய்தி சேகரித்தவர் தெய்வீகன் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, அனைத்துலக அளவில் சாதனைப் படைத்த மின்னலுக்கும், அறிவிப்பாளர் தெய்வீகனுக்கும் வாழ்த்துகள்.