தற்போது வேலூர் சிறைச்சாலையில் இருந்து வரும் பேரறிவாளனின் பரோல் குறித்த உத்தரவு அந்த சிறை நிர்வாகத்தை வியாழக்கிழமை வந்தடைந்ததைத் தொடர்ந்து அவர் சிறையிலிருந்து விடுதலையாகி ஜோலார்பேட்டையில் உள்ள தனது இல்லத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.
அவருடன் காவலுக்கு 15 பேர் கொண்ட காவல் துறை குழுவினரும் உடன் செல்கின்றனர்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனின் விடுதலைக்காக அவரது தாயார் அற்புதம்மாள் பல்லாண்டு காலமாக சளைக்காமல் போராடி வந்தார்.
தனது மகனின் விடுதலை அறிவிப்பு அந்தத் தாய்க்கு நிச்சயம் அளவில்லா மகிழ்ச்சியை அளித்திருக்கும். காரணம் ஏறத்தாழ 26 ஆண்டுகளுக்குப் பின்னர் சிறைச்சாலையை விட்டு வெளியேறும் பேரறிவாளன் வெளி உலகை முதன் முதலாகப் பார்க்கவிருக்கிறார்.
தற்போது பேரறிவாளனின் தந்தை உடல்நலம் குன்றியுள்ளதால், அதைக் காரணமாக வைத்து பேரறிவாளனுக்கு ஒரு மாத கால தற்காலிக விடுதலை வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.