Home கலை உலகம் பிக் பாஸ் வீட்டில் மீண்டும் ஜூலி, சக்தி, காயத்ரி, ஆர்த்தி, பரணி பிரவேசம்

பிக் பாஸ் வீட்டில் மீண்டும் ஜூலி, சக்தி, காயத்ரி, ஆர்த்தி, பரணி பிரவேசம்

1110
0
SHARE
Ad

bigg-boss-kamal-hassanசென்னை – நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் அதிரடித் திருப்பமாக ஏற்கனவே வெளியேற்றப்பட்ட பங்கேற்பாளர்கள் மீண்டும் வரவழைக்கப்பட்டு கமல்ஹாசன் முன்னிலையில் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

அண்மையக் காலங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி இரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக வெகுவாக சுவாரசியம் குறைந்துவிட்டதாக பெரும்பாலான இரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து முக்கிய பங்கேற்பாளர்கள் வெளியேறிவிட்டனர்.

அதைத் தொடர்ந்து பிந்து மாதவி, காஜல், சுஜா, ஹரிஷ் போன்ற ஒரு சிலர் புதிய வரவுகளாக பிக் பாஸ் வீட்டிற்குள் அனுமதிக்கப்பட்டாலும், அவர்களால் பெரிதாக இரசிகர்களைக் கவர முடியவில்லை.

#TamilSchoolmychoice

இதனால், பிக்பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டிங் எனப்படும் தொலைக்காட்சி இரசிகர்களின் பார்க்கும் விகிதாச்சாரம் வெகுவாகக் குறைந்ததாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, புதிய வரவுகளான காஜல், சுஜா போன்றவர்களின் பேச்சுகளும், நடை உடை பாவனைகளும், இரசிகர்களுக்கு வெறுப்பூட்டுவதாகவே அமைந்தன.

அதுமட்டுமல்லாமல், பிக் பாஸ் வீட்டில் நடத்தப்பட்ட விளையாட்டுகளும், ‘டாஸ்க்’ (task) என்ற பெயரில் நடத்தப்பட்ட போட்டிகளும் இரசிக்கத்தக்கதாகவோ, சுவாரசியமானதாகவோ அமையவில்லை.

பிக் பாஸ் வீட்டில் மீண்டும் மீண்டும் அவர்கள் சமைப்பதையும், சாப்பிடுவதையும், உப்பு சப்பில்லாத விஷயங்களை பெரிதாக நினைத்துப் பேசிக் கொண்டிருப்பதும் இரசிகர்களுக்கு போரடிக்க ஆரம்பித்துவிட்டது.

இதைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியவர்களுடன் நேர்காணல் நடத்திய கமல் யார் யார் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல விரும்புகிறீர்கள் எனக் கேட்க, ஜூலி, சக்தி, ஆர்த்தி, பரணி, ஆகியோர் இரசிகர்கள் விரும்பினால் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லத் தயார் எனத் தெரிவித்தனர்.

பின்னர் நடிகை ஓவியாவின் காணொளி (வீடியோ) ஒன்றும் ஒளிபரப்பப்பட்டது. அதில் தான் மீண்டும் பிக் பாஸ் இல்லம் செல்ல விரும்பவில்லை என்றும் சில புதிய படங்களில் நடிக்கவிருப்பதால், விரைவில் அந்தப் படங்களில் தன்னைப் பார்க்கலாம் என்றும் ஓவியா அந்தக் காணொளியில் கூறினார்.

இவர்களில், இருவர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லவிருப்பதாகவும் அவர்கள் யார் என்பதை இன்று திங்கட்கிழமை நிகழ்ச்சியைப் பார்க்கும்போது உங்களுக்குத் தெரிந்துவிடும் என்றும் கமல் தெரிவித்தார்.

-செல்லியல் தொகுப்பு