மும்பை, மார்ச். 25- இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பெமினா இதழ் சார்பில் அழகிப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
50-வது ஆண்டு இந்திய அழகிப் போட்டி நேற்றிரவு மும்பையில் உள்ள யாஷ்ராஜ் ஸ்டூடியோவில் நடந்தது. முன்னதாக இந்த போட்டிக்காக டெல்லி, கொல்கத்தா, புனே, பெங்களூர், இந்தூர், கோவா, சண்டிகார் நகரங்களில் தேர்வு சுற்றுப் போட்டிகள் நடத்தப்பட்டு இருந்தன.
அதில் தேர்வான அழகிகளிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதன் மூலம் இறுதிப் போட்டிக்கு 23 அழகிகள் தேர்வானார்கள். அவர்கள் நேற்றிரவு மும்பையில் நடந்த போட்டியில் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினார்கள். அழகிகளின் அணி வகுப்புகள் முடிந்ததும் கேள்விகள் கேட்கப்பட்டன. இறுதியில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த நவ்னீத் கவுர் 2013-ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா அழகியாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.
விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சோபிதா துலிபலா 2-வது இடத்தையும் லக்னோவை சேர்ந்த ஜோயா அப்ரோஸ் 3-வது இடத்தையும் பிடித்தனர். இவர்களுக்கு கிரீடங்கள் சூட்டப்பட்டன.
அழகிப் போட்டியில் நடுவர்களாக நடிகை அசின், கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மற்றும் கரன் ஜோகர், ஜான்ஆப்ரகாம், சித்ரன்கடாசிங், சியா மக்தவர், ரீது குமார் இருந்தனர். விழாவில் ஐஸ்வர்யாராய், சோனு நிகாம், பிரியங்கா சோப்ரா உள்பட பலர் பங்கேற்றனர்.