இலண்டன், டிசம்பர் 16 – மருத்துவக் கல்வி பயின்று வரும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மாணவி நடப்பாண்டின் உலக அழகியாக (Miss World) தேர்வு செய்யப்பட்டுள்ளார். 22 வயதான ரோலீன் ஸ்ட்ராஸ் என்ற இந்த இளம் அழகிக்கு லண்டனில் நடைபெற்ற இறுதிச்சுற்று போட்டியின்போது உலக அழகியாக மகுடம் சூட்டப்பட்டது.
உலகம் முழுவதிலும் இருந்து மொத்தம் 122 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் இப்போட்டியில் பங்கேற்றனர். இதில் ரோலீன் ஸ்ட்ராஸ் வாகை சூடினார்.
உலக அழகியாக அவரது பெயர் அறிவிக்கப்பட்டபோது தனது இரு கைகளையும் அழகான கண்களையும் அகல விரித்து ஆச்சரியப்பட்டவர், இந்த விருதை தனது தாய்நாட்டிற்கு அர்ப்பணிப்பதாகத் தெரிவித்தார்.
அவருக்கு கடந்த ஆண்டு உலக அழகிப் பட்டம் வென்ற ஃபிலிப்பைன்சை சேர்ந்த மெகன் யங் கிரீடத்தை அணிவித்தார். இம்முறை ஹங்கேரியைச் சேர்ந்த எடினா கல்க்சர் இரண்டாம் இடத்தையும், அமெரிக்காவைச் சேர்ந்த எலிசபெத் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
இந்தியா சார்பில் பங்கேற்ற கோயல் ராணா முதல் 10 இடத்திற்குள் வந்து ஆறுதல் தேடிக் கொண்டார்.
அழகி பட்டம் வென்ற பின்னர் பேசிய ரோலீன் ஸ்ட்ராஸ், தாய்நாட்டில் கல்வியின் முக்கியத்துவம் குறித்த பிரசாரத்தில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்தார்.
“கல்வியின் வழியே நமது கனவுகள் நனவாகும். எனக்கு கிடைத்த வாய்ப்புகள் காரணமாகவே இன்று இந்த நிலையை எட்டிப் பிடித்துள்ளேன். எனக்கு கிடைத்த வாய்ப்புகள் மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும்,” என்றார் ரோலீன் ஸ்ட்ராஸ்.