புதுடெல்லி, டிசம்பர் 16 – முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு, நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்படலாம் என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளன.
முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட பல பாஜக தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
“பாரத ரத்னா விருதுக்கு வாஜ்பாயை விட தகுதியானவர்கள் வேறு யாரும் இல்லை’ என்று ஜோஷி அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம், பிரதமர் நரேந்திர மோடி தமது சுதந்திர தின உரையில், வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்குவது குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், வரும் 25-ஆம் தேதி வாஜ்பாயின் 90-ஆவது பிறந்தநாளில், அவருக்கு “பாரத ரத்னா’ விருதை மத்திய அரசு அறிவிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாஜ்பாயின் பிறந்த நாள் “சிறந்த நிர்வாக தினமாக’ கொண்டாடப்படும் என்று பிரதமர் மோடி ஏற்கெனவே அறிவித்துள்ளார். காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு,
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் ஆகியோருக்கு கடந்த ஆண்டு, பாரத ரத்னா விருதை அறிவித்தது.
அப்போது, வாஜ்பாய் நாட்டின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பை காங்கிரஸ் புறக்கணித்துவிட்டது என்று பாஜக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.