கோலாலம்பூர், டிசம்பர் 16 – அடுத்த 90 நாட்களுக்குள் மஇகாவுக்கு மறுதேர்தல் நடத்த வேண்டுமென சங்கப் பதிவதிகாரி உத்தரவிட்டுள்ள நிலையில், மஇகா மத்திய செயலவைக்கான கூட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை, டிசம்பர் 18ஆம் தேதி நடைபெறும் என்ற அறிவிப்பு மத்திய செயற்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
நாடு திரும்பிய பழனிவேல் மத்திய செயலவையைக் கூட்டி, சங்கப் பதிவதிகாரி உத்தரவு குறித்து விவாதிப்போம் என ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்நிலையில் எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவிருக்கும் மத்திய செயலவையில் கலந்து கொள்ளும்படி கடந்த ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி நடைபெற்ற கட்சித் தேர்தலில் வென்றவர்களுக்கு, அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற கட்சித் தேர்தல் செல்லாது என சங்கப் பதிவதிகாரி அறிவித்துள்ள நிலையில், அந்தத் தேர்தலில் வென்றவர்களைக் கொண்டு வியாழக்கிழமை கூட்டப்படவிருக்கும் மத்திய செயலவைக் கூட்டம் சட்டப்படி செல்லுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சங்கப் பதிவதிகாரி விடுத்துள்ள உத்தரவுப்படி, கடந்தாண்டு தேர்தல் செல்லாது என்பதால், கடந்த 2009ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய செயலவைதான் தற்போது சட்டப்படியான செயலவையாகும்.
மஇகா தலைமையகத்திற்கு தற்போது இருக்கும் ஒரே வழி, சங்கப் பதிவதிகாரியின் உத்தரவுக்கு எதிராக சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமையின்படி, அடுத்த 30 நாட்களுக்குள் உள்துறை அமைச்சருக்கு மேல்முறையீடு செய்வதுதான்.
டிசம்பர் 5ஆம் தேதி கடிதம் சமர்ப்பிக்கப்பட்டதால், எதிர்வரும் ஜனவரி 5ஆம் தேதிக்குள் மஇகா தலைமையகத்தின் மேல் முறையீடு உள்துறை அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அதன் பின்னர் உள்துறை அமைச்சரின் முடிவு அறிவிக்கப்பட்டு அந்த முடிவு மீது அதிருப்தி கொண்டால், மஇகா தலைமையகம் உயர் நீதிமன்றத்தில் அந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் விண்ணப்பத்தை சட்ட ரீதியாக சமர்ப்பிக்கலாம்.
இத்தகைய சட்ட ரீதியான அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதை விட்டுவிட்டு,
சங்கப் பதிவதிகாரியின் முடிவுக்கு நேர் விரோதமாக, எந்தத் தேர்தல் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதோ, அந்தத் தேர்தலின் வழி தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய செயலவை உறுப்பினர்களைக் கொண்டு, இன்னொரு மத்திய செயலவையைக் கூட்டுவது –
எந்த காரணத்தால் என்ற சந்தேகமும் – இது நியாயம்தானா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளதாக – மஇகா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகின்றது.