சிட்னி, டிசம்பர் 16 – நேற்று சிட்னியில் உள்ள லிண்ட் உணவகத்தில் பணயக் கடத்தல் சம்பவத்தை அரங்கேற்றிய தீவிரவாதி ஆஸ்திரேலிய காவல் துறையின் அதிரடிப் படையினர் நடத்திய இருமுனைத் தாக்குதலில் கொல்லப்பட்டான் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவனோடு, சேர்ந்து மேலும் இரண்டு பணயக் கைதிகளும் அதிரடிப் படை தாக்குதலால் கொல்லப்பட்டனர் என்றும் தகவல்கள் கூறுகின்றன. அதில் ஒருவர் பெண்மணி.
அதிரடிப்படையினரின் தாக்குதலால் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
பணயக் கடத்தல்காரன் தனி ஒரு ஆளாகவே இயங்கினான் என்றும் அவன் மனநிலைக் கோளாறு கொண்டவன் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவன் தனக்கு ஐஎஸ்ஐஎஸ் சின்னத்தோடு கூடிய கொடி ஒன்றை அனுப்பி வைக்க வேண்டுமெனவும், ஆஸ்திரேலியப் பிரதமருடன் தான் பேச வேண்டும் என்றும் தன்னுடன் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தியவர்களிடம் முன்பு அவன் தெரிவித்திருந்தான்.
அவன் தனது முன்னாள் மனைவியைக் கொலை செய்ய உடந்தையாக இருந்த குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தான் என்றும், அவன் மீது பாலியல் குற்றச்சாட்டுகளும் நிலுவையில் இருந்தன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவனது குற்றப் பின்னணி காரணமாக ஆஸ்திரேலியக் காவல் துறைக்கு அவனைப்பற்றி நிறையத் தகவல்கள் தெரிந்திருக்கின்றன.
ஆனால், அவனுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டே, அதிரடிப்படையினர் இரு முனைகளில் துப்பாக்கித் தாக்குதல் நடத்தி அந்த உணவகத்தின் உள்ளே நுழைந்தனர்.
கடத்தல்காரன் ஈரான் நாட்டு அகதி என்றும் தனக்குத் தானே பிரகடனப்படுத்திக்கொண்ட முஸ்லீம் மதபோதகர் அவன் என்றும் மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.
சிட்னி தெருக்களில் துண்டுப் பிரசுரங்களை அவன் கடந்த காலங்களின் விநியோகித்த காணொளிக் காட்சிகளை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின.
உலகத்தையே ஒரு நாள் முழுமையாக ஈர்த்து விட்ட இந்த பணயக் கடத்தல் நாடகம் ஒரு வழியாக ஒரு முடிவுக்கு வந்துள்ளது.