சிட்னி, டிசம்பர் 16 – நேற்று காலை 10.00 மணிக்கு சிட்னியில் சந்தடி மிக்க பகுதியில் உள்ள லிண்ட் (Lyndt) சாக்லேட் உணவகத்தில் தொடங்கிய பணயக் கடத்தல் சம்பவம் 16 மணி நேர பரபரப்புக்குப் பின்னர் ஒரு முடிவுக்கு வந்தது.
ஏற்கனவே, ஐந்து பெண்கள் பணயக் கடத்தல் நடைபெற்ற உணவகத்திலிருந்து தப்பித்து வெளியே ஓடி வந்தனர். அதன் பின்னர் மலேசிய நேரப்படி திங்கட்கிழமை நள்ளிரவு வாக்கில் மேலும் பலர் உணவகத்திலிருந்து அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர்.
அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் இரண்டு முனைகளில் தாக்குதல் நடத்தி உணவகத்தின் உள்ளே நுழைந்தனர். காயமடைந்த சிலர் மருத்துவமனைகளுக்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டனர்.
எத்தனை பேர் இந்த காவல்துறை தாக்குதல் சம்பவத்தில் மரணமடைந்துள்ளனர் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.
பணயக் கடத்தல் சம்பவத்தை அரங்கேற்றியவன் ஈரான் நாட்டைச் சேர்ந்த முஸ்லீம் மதபோதகர் என்றும், அவன் மீது ஏற்கனவே பல குற்றவியல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருந்தன என்பதால் ஆஸ்திரேலியக் காவல் துறையினருக்கு அவனது பின்புலங்கள் நன்கு தெரிந்திருந்தன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த கடத்தல்காரன் கடந்த காலங்களில் சிட்னி தெருக்களில் நின்று கொண்டு கையேடுகளை விநியோகித்து வந்திருக்கின்றான் என்பதை எடுத்துக்காட்டும் காணொளிகள் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
உலகப் புகழ் பெற்ற சுவையான சாக்லேட்டுகளுக்கு பெயர் பெற்ற லிண்ட் நிறுவனம் இந்த சம்பவத்தால் ஒரே நாளில் உலகப்புகழ் பெற்றுவிட்டது.
சுவிட்சர்லாந்து நாட்டை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் அந்த சாக்லெட் நிறுவனம் ஏற்கனவே மிகவும் புகழ் பெற்ற வணிக முத்திரையைக் (Brand) கொண்டது என்றாலும், இந்த பரபரப்பான சம்பவத்தின் மூலம் உலக மக்களின் கவனத்தை ஒரே நாளில் ஈர்த்து விட்டது.