ஷா ஆலாம் – பாஸ் கட்சியிடனுனான அனைத்து அரசியல் தொடர்புகளும் துண்டிக்கப்படுவதாக திங்கட்கிழமை (28 ஆகஸ்ட் 2017) பக்காத்தான் ஹரப்பான் கூட்டணித் தலைவர்கள் அறிவித்திருப்பதைத் தொடர்ந்து, அந்த முடிவை சிலாங்கூர் மாநிலத்திலும் அமுல்படுத்த பிகேஆர் முனையும் என சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தெரிவித்திருக்கிறார்.
பாஸ், பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியில் அங்கம் வகிக்காவிட்டாலும், சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் ஆட்சிக் குழுவில் இன்னும் இடம் பெற்றிருக்கிறது.
பக்காத்தான் ஹரப்பான் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அறிவிப்பைத் தொடர்ந்து, மறுநாள் செவ்வாய்க்கிழமை (29 ஆகஸ்ட் 2017) பிகேஆர் அரசியல் குழுக் கூட்டம் கூட்டப்பட்டு, பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்தது.
இந்தப் பிகேஆர் அரசியல் குழுக் கூட்டத்தில் அஸ்மின் அலி கலந்து கொள்ளாததைத் தொடர்ந்து, அவரது நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது குறித்த ஐயப்பாடுகள் எழுப்பப்பட்டிருந்தன.
இந்நிலையில், தனது நிலைப்பாட்டை அஸ்மின் அலி தெளிவாக்கியுள்ள நிலையில், இனி சிலாங்கூர் மாநில அரசாங்கம் கவிழுமா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிலாங்கூர் மாநில அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை பாஸ் கட்சி மீட்டுக் கொண்டால் அதன்மூலம், அஸ்மின் அலி தலைமையிலான சிலாங்கூர் மாநில அரசு கவிழக் கூடிய ஆபத்து நேரலாம். அதே நேரத்தில் பாஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களில் சிலர் தொடர்ந்து பக்காத்தான் ஹரப்பான் கூட்டணிக்கும், அஸ்மின் அலிக்கும் ஆதரவு வழங்கும் நிலைமையும் உருவாகலாம்.
இந்த அரசியல் சூழலைத் தொடர்ந்து சிலாங்கூர் மாநிலத்தில் ஒவ்வொரு சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளிலும் மும்முனைப் போட்டிகளை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடிக்கு பக்காத்தான் ஆளாகியுள்ளது. இதன்மூலம் சில தொகுதிகளில் சாதகமும், சில தொகுதிகளில் பாதகமும் ஏற்படும் எனக் கருதப்படுகிறது.