புதுடில்லி – அடுத்த சில நாட்களில் சீனாவுக்கு வருகை மேற்கொள்ளவிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதற்கு முன்பாக தனது அமைச்சரவையில் மாபெரும் மாற்றங்களை மேற்கொள்ளவிருக்கிறார்.
ஏறத்தாழ 12 அமைச்சர்கள் மோடி அமைச்சரவையில் மாற்றப்படுவார்கள் எனக் கருதப்படுகிறது. நாடாளுமன்ற விவகார அமைச்சராக இருந்த வெங்கையா நாயுடு இந்தியத் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக புதிய அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படுவார் எனவும், அருண் ஜெட்லியிடம் கூடுதலாக இருக்கும் பாதுகாப்புத் துறை அமைச்சுக்கு மற்றொருவர் நியமிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நிதியமைச்சராக பெரும் சுமை கொண்ட அமைச்சுப் பொறுப்பை வகிக்கும் அருண் ஜெட்லி, பாதுகாப்புத் துறையையும் கண்காணித்து வருகிறார். சீனாவுடன் எல்லைத் தகராறுகள் முற்றி வரும் நிலையில், பாதுகாப்புத் துறையை முழுமையாகக் கவனிக்க தனி அமைச்சர் ஒருவர் தேவை என்பதை மோடி உணர்ந்துள்ளார் என ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.
மோடி அமைச்சரவையில் இருந்து உமா பாரதி உடல்நலக் காரணங்களால் விலகுவதாக அறிவித்திருக்கிறார்.
அவரைத் தொடர்ந்து ராஜிவ் பிரதாப் ரூடி, பாக்கான் சிங், சஞ்சீவ் பல்யாண் ஆகியோரும் தங்களின் பதவி விலகல் கடிதங்களைச் சமர்ப்பித்திருக்கின்றனர்.
இதற்கிடையில், பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் கட்சியிலிருந்து சிலரையும், தமிழகத்தின் அதிமுக கட்சியிலிருந்து சிலரையும் தனது அமைச்சரவையில் இணைத்துக் கொள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எண்ணம் கொண்டுள்ளார் என்றும் இதன் மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் மாபெரும் கூட்டணி ஒன்றை அமைக்க மோடி தயாராகி வருகிறார் என்றும் இந்திய ஊடகங்கள் கருத்து தெரிவித்திருக்கின்றன.