புதுடில்லி – நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவைக் குழுவினர் அதிபர் மாளிகையில் பதவியேற்கவிருக்கின்றனர் என இந்திய ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.
பதவியேற்பு வைபவத்திற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து புதிய அமைச்சர்கள் யார், பதவி விலகும் அமைச்சர்கள் யார் என்ற ஆரூடங்கள் அதிகரித்து வருகின்றன.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை பாஜகவின் மூத்த அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ், நிதியமைச்சர் அருண் ஜெட்லி, போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி ஆகியோர் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
அதே வேளையில், பாஜக தலைவர் அமித் ஷா ஆர்எஸ்எஸ் இயக்கத்தினரின் ஒருங்கிணைப்புக் குழுவினரோடு தனியே பேச்சு வார்த்தை நடத்தினார்.
மோடி அமைச்சரவையில் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தின் சார்பிலும், தமிழகத்தின் அதிமுக கட்சி சார்பிலும் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பர் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
பாஜகவின் சார்பில் சில புதுமுகங்களும் அமைச்சர்களாக நியமிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது