கோலாலம்பூர் – ‘ஜாங்கிரி’.. அடடா.. படத்தின் பெயரே சுவையாக இருக்கிறதே என்று தோணலாம்.
ஆம்.. ‘ஜாங்கிரி’ என்ற பெயரைத் தேர்வு செய்ய தயாரிப்பாளர் நந்தினி கணேசனும், இயக்குநர் கபிலன் பொலேந்திரனும் நிறையவே யோசித்து தான் இப்பெயரைத் தேர்வு செய்திருக்கிறார்கள். ஆனால், அக்காரணம் என்னவென்று பின்னர் அறிவிப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர்.
ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும் நகைசுவையோடு, சில முக்கியமான சமூகக் கருத்துக்களையும் சொல்லப்போகும் இத்திரைப்படம், ‘தற்கொலை வேண்டாம்’, ‘இன்னொரு வாய்ப்பு இருக்கிறது’, ‘குண்டர் கும்பல் நடவடிக்கை வேண்டாம்’ (Say No to Suicide, Another Chance is deserved, Say No to Gangster-ism) என்ற மூன்று முக்கியப் பிரச்சாரங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கவிருக்கிறது.
படப்பிடிப்புப் பணிகள் நிறைவு பெற்று தற்போது படத்தொகுப்புப் பணிகள் நடைபெற்று வரும் இத்திரைப்படத்தில் ‘கீதையின் ராதை’ புகழ் விக்ரான், ‘விழுதுகள்’ அறிவிப்பாளர் அகல்யா மணியம், ஜி கிராக் கர்ணன், குபேன் மகாதேவன், நந்தினி உள்ளிட்டோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
ஷங்கர் இந்திரா ஒளிப்பதிவு செய்ய, ஜித்திஸ் இசையமைத்திருக்கிறார்.
படத்தின் வேலைகள் ஒருபுறம் சென்று கொண்டிருக்க, இத்திரைப்படம் குறித்து மக்களிடம் பிரச்சார மேற்கொள்ள, ‘ஜாங்கிரி’ சின்னம் பொறித்த ‘டி ஷர்ட்’-களை கோலாலம்பூர், பினாங்கு உள்ளிட்ட மாநிலங்களில் படக்குழுவினர் விற்பனை செய்து வருகின்றனர்.
அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு அப்பகுதிகளைச் சேர்ந்த ஏழை, எளிய மக்களுக்கு உதவியும் செய்து வருகின்றனர்.
படம் உருவாக்குவதோடு மட்டுமின்றி, அத்திரைப்படத்தை மக்களிடமும் கொண்டு சேர்க்க பல இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு, ‘டி சர்ட்’ விற்பனை செய்து அதன் வருமானத்தையும் எளியோருக்கு வழங்கும் இந்த இளைஞர்களின் முயற்சிக்கு வாழ்த்துகள் கூறுவோம்.
‘ஜாங்கிரி’ திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்களுக்கு, ‘ஜாங்கிரி புரோடக்சன் ஹவுஸ்’ என்ற https://www.facebook.com/jhangriproduction/ பேஸ்புக் பக்கத்தினைப் பார்வையிடலாம்.