கோலாலம்பூர் – சிறைத் தண்டனை அனுபவித்து வரும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் துணைவியார் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் உடல் நலம் குன்றி கோலாலம்பூர் அல் இஸ்லாம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, அன்வார் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு அவரை நேரில் சென்று சந்தித்தார்.
உயர் இரத்த அழுத்தம் காரணமாக சிறையிலிருக்கும் அன்வார் நேற்று கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து தனது மனைவியைச் சந்திக்க அன்வார் இப்ராகிம் செய்திருந்த விண்ணப்பம் சிறை அதிகாரிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, வான் அசிசாவை அன்வார் சென்று சந்தித்திருக்கிறார்.
சுமார் 45 நிமிடங்கள் அன்வார் வான் அசிசாவுடன் இருந்ததாக அவர்களின் புதல்வியும் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான நூருல் இசா தெரிவித்திருக்கிறார்.
வான் அசிசாவை, மகாதீரின் துணைவியார் சித்தி ஹஸ்மா மருத்துவமனையில் சந்தித்தபோது….
64 வயதான வான் அசிசா தற்போது நலமுடன் இருப்பதோடு, தொடர்ந்து சிகிச்சையும் பெற்று வருகிறார். இருப்பினும் எந்த நோய்க்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
இன்று புதன்கிழமை வான் அசிசா பெட்டாலிங் ஜெயாவிலுள்ள மலாயாப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் என்றும் பிகேஆர் கட்சி சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில், துன் மகாதீரின் மனைவி டாக்டர் சித்தி ஹஸ்மாவும் வான் அசிசாவை மருத்துவமனையில் சந்தித்திருக்கிறார் (மேலே படம்).