Home Uncategorized மஇகா சட்டவிதிகள் மாற்றம்: மத்திய செயலவை சுமுகமான இணக்கம் கண்டது!

மஇகா சட்டவிதிகள் மாற்றம்: மத்திய செயலவை சுமுகமான இணக்கம் கண்டது!

2267
0
SHARE
Ad

MIC-logoகோலாலம்பூர் – மஇகாவின் சட்டவிதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு மாபெரும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான விவாதங்கள் கடந்த சில நாட்களாக மத்திய செயலவை உறுப்பினர்களிடையே நடந்தேறி, பல்வேறு அம்சங்களில் சுமுகமான இணக்கம் காணப்பட்டிருக்கின்றன என மஇகா வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த வாரத்திலேயே இரண்டு கூட்டங்கள், திங்கட்கிழமையும் (18 செப்டம்பர் 2017) நேற்று புதன்கிழமையும் மத்திய செயலவையினரிடையே நடைபெற்றதாகவும், இந்தக் கூட்டங்களின் வாயிலாக புதிய திருத்தங்களில் மேலும் சில சீரமைப்புகள் செய்யப்பட்டு, தற்போது இந்த சட்டவிதித் திருத்தங்கள் முழுமையான வடிவம் பெற்றிருக்கின்றன என்றும் மஇகா வட்டாரங்கள் கூறியுள்ளன.

MIC Constitution edited photoஎதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறும் மஇகா பொதுப் பேரவையில் திறப்பு விழாவுக்குப் பின்னர் இந்த சட்டவிதித் திருத்தங்கள் பேராளர்களிடையே சமர்ப்பிக்கப்பட்டு, விவாதங்களுக்கும், திருத்தங்களுக்கும் பின்னர் அவை ஏற்றுக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

மஇகாவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், முன்மொழியப்பட்டிருக்கும் சட்டவிதித் திருத்தங்களை, அனைத்து மத்திய செயலவை உறுப்பினர்களிடத்திலும் சமர்ப்பித்து அவர்கள் தரும் விளக்கங்களையும், சமர்ப்பிக்கும் திருத்தங்களையும் தொடர்ந்து இந்த சட்டவிதித் திருத்தங்களில் இணைத்து வருகிறார்.

இதன் காரணமாக, மத்திய செயலவையினரிடையே நடைபெறும் வெளிப்படையான, துணிவான, விவாதங்களினால், ஏதோ கடுமையான மோதல்கள், முரண்பாடுகள் மத்திய செயலவை உறுப்பினர்களிடையே நிலவுவது போன்று சில ஊடகங்கள் சித்தரித்திருக்கின்றன.

ஆனால், அப்படி எதுவும் நடைபெறவில்லை என்றும் மஇகா வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டன. மத்திய செயலவையில் நடைபெற்றது வழக்கமான விவாதங்களே எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

subra-dr-bidor-temple-07052017எனினும் அனைத்து மத்திய செயலவை உறுப்பினர்களும், மஇகா தொகுதித் தலைவர்களும் இந்த சட்டவிதித் திருத்தங்களை அணுக்கமாகக் கண்காணித்து விவாதித்து வருவதற்கு காரணங்களும் இல்லாமல் இல்லை.

இந்த சட்டவிதித் திருத்தங்கள் மாநில அளவில் புதிய தேர்தல்களை முன்மொழிந்திருப்பதால், யார் இந்தத் தேர்தல்களில் போட்டியிடத் தகுதி பெற முடியும், யார் வாக்களிப்பார்கள், புதிய தேர்தல்கள் நடைபெறும் நடைமுறைகள் என்ன என்பதில் ஒவ்வொரு மத்திய செயலவை உறுப்பினரும் அக்கறை செலுத்துகின்றனர். தங்களின் சொந்த மாநிலங்களில் தாங்கள் போட்டியிடத் தகுதி பெற முடியுமா என்பதை அறிந்து கொள்ளவும் அவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

வாக்களிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக, இதுவரையில் தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுக்க கிளைத் தலைவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். ஆனால், புதிய திருத்தங்களுக்குப் பிறகு ஒவ்வொரு மஇகா கிளையின் முக்கியப் பொறுப்பாளர்கள் மற்றும் இளைஞர், மகளிர், புத்திரா, புத்திரி உள்ளிட்ட 10 பேர் தேசியத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பர். இதனால், மஇகாவில் 4 ஆயிரம் கிளைகள் என்று வைத்துக் கொண்டால், மொத்த வாக்காளர்கள் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களாவர்.

MIC-Logoஅதே போல, மாநிலத் தலைவர், மாநிலத் துணைத் தலைவர், தேசியத் துணைத் தலைவர், 3 தேசிய உதவித் தலைவர்கள், மத்திய செயலவை உறுப்பினர்கள் ஆகியோரை ஒவ்வொரு கிளையிலிருந்து தலா 6 முக்கியப் பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுப்பர். இந்தப் பதவிகளுக்கு சுமார் 24 ஆயிரம் பேர் வாக்களிப்பர்.

இதுபோன்ற அதிரடியான, கடந்த பல ஆண்டுகளில் இல்லாத மாபெரும் சட்டவிதித் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் காரணத்தினால்தான், அனைத்து மத்திய செயலவை உறுப்பினர்களும், கட்சியின் உயர்நிலைப் பொறுப்பாளர்களும் தங்களின் வெளிப்படையான கருத்துக்களைத் தெரிவித்து அதன் மூலம் புதிய சட்டவிதித் திருத்தங்களுக்கான வடிவத்தைக் கட்டம் கட்டமாக செதுக்கி வருகின்றனர் என்றும் மஇகா வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

நாளை வெள்ளிக்கிழமை நடைபெறும் மத்திய செயலவைக் கூட்டத்தில் புதிய திருத்தங்களின் இறுதி வடிவம் வரையறுக்கப்பட்டு, சனிக்கிழமை நடைபெறும் பொதுப் பேரவையில் இவை பேராளர்களின் அங்கீகாரத்துக்காக சமர்ப்பிக்கப்படும்.

-இரா.முத்தரசன்