Home கலை உலகம் ‘ராஜா ஒன் மேன் ஷோ’ பெற்றோருக்குக் கொடுக்கும் மிகச் சிறந்த பரிசு: பாடகர் மனோ

‘ராஜா ஒன் மேன் ஷோ’ பெற்றோருக்குக் கொடுக்கும் மிகச் சிறந்த பரிசு: பாடகர் மனோ

1006
0
SHARE
Ad

Raajaகோலாலம்பூர் – “சார்.. இதற்கு முன் எத்தனையோ இசை நிகழ்ச்சிகள் மலேசியாவில் நடந்திருக்கிறது. ‘ராஜா ஒன் மேன் ஷோ’ அதிலிருந்து எந்த வகையில் மாறுபட்டு இருக்கப் போகிறது?” என்று செய்தியாளர் ஒருவர் கேட்க, அதற்குப் பதிலளித்த மை ஈவண்ட்ஸ் இண்டர்நேஷனல் தலைமைச் செயலதிகாரி ஷாகுல் ஹமீத், “இதற்கு முன் எத்தனையோ இசை நிகழ்ச்சிகள் நடந்திருக்கலாம். ஆனால் நாங்கள் நடத்தப் போவது, இதுவரையில் மலேசியா கண்டிராத ஒன்று. காரணம் இசையின் கிரியேட்டரையே (படைப்பாளர்) மலேசியாவுக்கு அழைத்து வந்து இசை நிகழ்ச்சி நடத்தப் போகிறோம். அது தான் அதன் தனிச்சிறப்பு” என்றார்.

ஷாகுலின் தீர்க்கமான பதில், இந்த இசை நிகழ்ச்சியின் மீது அவர் கொண்டிருக்கும் மிகப் பெரிய கனவையும், பெருமையையும் முன்னிறுத்திக் காட்டியது.

‘ராஜா ஒன் மேன் ஷோ’ நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வச் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று சனிக்கிழமை, தலைநகரில் உள்ள பிரபல தங்கும்விடுதியில் நடைபெற்றது.

#TamilSchoolmychoice

அதில், இளையராஜாவின் இசையில் பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடிய பின்னணிப் பாடகர் மனோ முக்கியப் பிரமுகராகக் கலந்து கொண்டார்.

அவரோடு, இந்த செய்தியாளர் சந்திப்பில், ‘ராஜா ஒன் மேன் ஷோ’ நிகழ்ச்சியின் முக்கிய ஆதரவாளர்களில் ஒருவரான ஆசியா மெட்ரோப்பாலிடின் பல்கலைக்கழகம் சார்பில் பிரதிநிதி முரு, இந்நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வத் தூதுவர்களான, மலேசியக் கலைஞர்கள் கல்பனாஸ்ரீ, ஜாஸ்மின் மைக்கேல், கோபி, இசையமைப்பாளர் லாரன்ஸ், லியோன், சசிதரன், புஷ்பா நாராயணன், ரேகா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கடந்த 2013-ம் ஆண்டு, ‘கிங் ஆஃப் கிங்ஸ்’ நிகழ்ச்சி மலேசியாவில் நடந்த போது, அதில் மலேசிய ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இசைஞானி இளையராஜா, எதிர்பாராதவிதமாக உடல்நலம் குன்றியதால், கடைசி நேரத்தில் வர இயலாமல் போனது.

மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது கூட, ரசிகர்களின் ஆசையை நிறைவேற்ற முடியாமல் போனதே எனப் பெரிதும் வருத்தப்பட்டு, நிச்சயமாக மலேசிய மக்களை விரைவில் சந்திப்பேன் என்று அங்கிருந்த படியே காணொளி ஒன்றை வெளியிட்டார்.

இதோ, அந்த நாள் 2017-ல் நிறைவேறப் போகிறது. வரும் அக்டோபர் 7-ம் தேதி, கோலாலம்பூர் புக்கிட் ஜாலில் அரங்கில், ‘ராஜா ஒன் மேன் ஷோ’ என்ற நேரலை இசை நிகழ்ச்சியில், தனது முழு ஆர்கஸ்ட்ராவுடன், சுமார் 70-க்கும் மேற்பட்ட பின்னணிப் பாடகர்களுடன் இசைஞானி, ரசிகர்கள் முன் தோன்றி, அவர்களுக்குப் பிடித்த அனைத்துப் பாடல்களையும் பாடி ரசிகர்களை இன்ப மழையில் நனைய வைக்கப் போகிறார்.

MKURaajaonemanshow1“மண்வாசனை கலந்த இளையராஜாவின் இசை, மலேசியத் தமிழர்களின் எல்லா உணர்வுகளோடும் கலந்திருக்கிறது. அவர்கள் கடுமையான போக்குவரத்தில் போய் கொண்டிருக்கும் போது, அவர்களின் இரத்த அழுத்தத்தை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது. அவர்களின் குடும்ப விழாக்களில் மகிழ்ச்சியைக் கூட்டுகிறது. துக்க நிகழ்ச்சிகளில் கண்ணீரைத் துடைக்கிறது. இப்படியாக இளையராஜா அண்ணனின் இசை ஒரு மருந்தாக நமக்கெல்லாம் இருந்து வருகின்றது. அப்படிப்பட்ட இசை உங்களது கண்ணெதிரே இளையராஜாவே நிற்க, அவர் மூலமாகவே நேரடியாகவே உங்கள் காதுகளை எட்டப் போகிறது. எனவே, இளைஞர்களே உங்களது தாய், தந்தையருக்கு வாழ்வில் மறக்க முடியாது பரிசு ஒன்று கொடுக்க நினைத்தால், அவர்களை இந்த மாபெரும் சரித்திரம் படைக்கப் போகும் இசை நிகழ்ச்சிக்கு அழைத்து வாருங்கள்” என்று பாடகர் மனோ கேட்டுக் கொண்டார்.

இதனிடையே,, அண்மையில் புக்கிட் ஜாலில் அக்சிதா அரேனா அரங்கம் சீ விளையாட்டுப் போட்டிகளுக்காகப் புதுப்பிக்கப்பட்டு தற்போது மிகப் பொலிவுடன் இருப்பதாகவும், எந்த இடத்தில் இருந்து பார்த்தாலும், மேடை அவ்வளவு அழகாகத் தெரியும் படி அமைக்கப்பட்டிருப்பதாகவும் ஷாகுல் தெரிவித்தார்.

சுமார் 5 முதல் 6 மணி நேரம் மலேசிய ரசிர்களை இசை மழையில் நனைய வைக்கப் போகும் இந்த மிகப் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை தவற விட வேண்டாம் என்றும் ஷாகுல் கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சி குறித்த மேல் விவரங்களுக்கு Raaja The One Man Show Live in Kuala Lumpur என்ற பேஸ்புக் பக்கத்திலும், www.myticket.asia என்ற இணையத்தளத்தின் வாயிலாகவும் டிக்கெட்டுகளை வாங்கிக் கொள்ளலாம் என்றும் ஷாகுல் குறிப்பிட்டார்.

படங்கள்: நன்றி எம்கேயு