கோலாலம்பூர் – நேற்று சனிக்கிழமை பிற்பகலில் தொடங்கிய மஇகாவின் 71-வது பொதுப் பேரவையில், கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, மிக விரிவான அளவில் கொண்டு வரப்பட்ட, சட்டவிதித் திருத்தங்கள் மஇகா பேராளர்களால் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டன.
நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் தொடங்கிய மாநாட்டில் உரையாற்றிய மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், இரண்டு நாட்களுக்கு நடைபெறும் பொதுப் பேரவையின் நோக்கங்களையும், பொதுவான அரசியல் சமூக விவகாரங்கள் குறித்தும் பேராளர்களுக்கு விளக்கமளித்தார்.
அதன்பின்னர் பொதுப் பேரவையில் கட்சியின் ஆண்டறிக்கையும், கணக்கறிக்கையும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதன் பின்னர் சட்டவிதித் திருத்தங்கள் பேராளர்களின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்டன. சில விவாதங்களுக்குப் பின்னர் அனைத்துப் பேராளர்களாலும், சட்டவிதித் திருத்தங்கள் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டன.
முன்னதாக சட்டவிதித் திருத்தங்கள் குறித்தும், அதன் முக்கிய அம்சங்கள் குறித்தும், இந்த சட்டவிதித் திருத்தங்களால், கிளை, தொகுதி, தேசிய நிலையில் ஏற்படப் போகும் மாற்றங்கள் குறித்தும் பேராளர்களுக்கு மஇகா தேசியத் தலைவர் டாக்டர் சுப்ரா சுமார் 20 நிமிடங்கள் விளக்கமளித்தார்.
அந்த விளக்கங்களுக்குப் பின்னர், பேராளர்கள் சில விவாதங்களுக்குப் பின்னர் சட்டவிதித் திருத்தங்களை ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர்.