கோலாலம்பூர் – நெகிரி செம்பிலான் கெட்கோ நிலத்திட்ட விவகாரத்தில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த லோட்டஸ் குழுமத்தைச் சேர்ந்த டத்தோ ரெனா.இராமலிங்கம், ரெனா.துரைசிங்கம் இருவரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.
கெட்கோ விவகாரத்தில் ஏற்கனவே, கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி 69 வயது நபர் ஒருவரை விசாரணைக்காக தடுப்புக் காவலில் வைத்த ஊழல் தடுப்பு ஆணையம், அதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி இராமலிங்கம், துரைசிங்கம், இருவரையும் விசாரணைக்காகத் தடுத்து வைத்தது.
விசாரணையின்போது, டத்தோ சகோதரர்கள் இருவரும் ஊழல் தடுப்பு ஆணையத்திடம் உரிய ஆவணங்களை சமர்ப்பித்திருப்பதாகவும், கெட்கோ நிலத்திட்டம் குறித்த தங்களின் தரப்பு விளக்கங்களை ஆணையத்திடம் வழங்கியிருப்பதாகவும் அறியப்படுகிறது.
கெட்கோ நிலத்திட்ட விவகாரத்தில் யார் மீதாவது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்படுமா என்பது குறித்து ஊழல் தடுப்பு ஆணையம் இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.