கோலாலம்பூர் – வடகொரிய அதிபரின் ஒன்று விட்ட சகோதரர் கிம் ஜோங் நம், கடந்த பிப்ரவரி 13-ம் தேதி மலேசிய விமான நிலையத்தில் விஷம் தேய்த்துக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில், இந்தோனிசியாவைச் சேர்ந்த சித்தி ஆயிஷா (வயது 25), வியட்னாமைச் சேர்ந்த டோன் (வயது 28) ஆகிய இருவரும் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு தற்போது அவர்கள் மீதான விசாரணை நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், இந்தக் கொலை வழக்கில் தொடர்புடையதாக நம்பப்படும் மேலும் நான்கு பேர் மீது நேற்று ஷா ஆலம் உயர்நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
இரு பெண்களிடமும் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், அந்த 4 பேரும் சாங், ஜேம்ஸ், ஒய் மற்றும் ஹனமோரி என்பது தெரியவந்திருக்கிறது என விசாரணை அதிகாரி துணைக் கண்காணிப்பாளர் வான் அசிருல் நிசாம் சே வான் அசிஸ் கூறியிருக்கிறார்.
“கருப்பு நிற சட்டை அணிந்த மிஸ்டர் ஒய் உடன் டோன் செல்கிறார். மிஸ்டர் ஒய் தான் டோனின் கையில் இரசாயனத்தைப் பூசியது. அதேவேளையில் டோனுக்கு டாக்சி டிக்கெட் எடுத்துக் கொடுக்கும் பொறுப்பும் அவருடைய பொறுப்பாக இருந்திருக்கிறது”
“மிஸ்டர் சாங் என்பவனின் பொறுப்பு என்னவென்றால் சித்தி ஆயிஷாவின் கையில் இரசாயனத்தை பூசுவது அதேவேளையில் ஹனாமோரியின் வேலை மிஸ்டர் ஒய்க்கு கட்டளைகளை இடுவது. ஜேம்சின் பணி சித்தி ஆயிஷாவை வேலைக்கு அமர்த்தியது” என்று நேற்று வியாழக்கிழமை சாட்சிகள் தெரிவித்தனர்.