Home கலை உலகம் திரைவிமர்சனம்: ‘மெர்சல்’ – தீபாவளிக்கேற்ற அறுசுவை விருந்து!

திரைவிமர்சனம்: ‘மெர்சல்’ – தீபாவளிக்கேற்ற அறுசுவை விருந்து!

1709
0
SHARE
Ad

Mersalகோலாலம்பூர் – தீபாவளிப் பண்டிகையை மேலும் குதூகலமாக்கும் வகையில் இன்று உலகமெங்கும் வெளியாகியிருக்கிறது விஜய் – அட்லீ கூட்டணியின் இரண்டாவது படமான ‘மெர்சல்’.

தீபாவளி தினத்தன்று மக்களின் மகிழ்ச்சியான மனநிலையில் என்ன எதிர்பார்ப்பார்களோ? அது அத்தனையையும் கொடுத்திருக்கிறது இந்தக் கூட்டணி.

காமெடி, ஆக்சன், காதல், கிராமத்து மண்வாசனை அதோடு சமூகத்துக்குத் தேவையான மருத்துவத்துறை பற்றிய நல்ல கருத்து. இவை அத்தனையும் ஒரே படத்தில் மிக அழகாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் அட்லீ.

#TamilSchoolmychoice

அதற்கேற்ப விஜய் தனது நடிப்பு, நடனம், உடல்மொழி, வசனம் என அனைத்திலும் தேவைக்கேற்ப அளவில் கலந்து, ஒட்டுமொத்த படத்தையும் தாங்கி நிற்கிறார்.

மதுரை மண்ணின் இளைஞனை அப்படியே கண்முன்னே நிறுத்துகிறார். நிச்சயமாக விஜயிடம் இதுவரை ரசித்தவைகளை விட, இந்தப் படத்தில் இன்னும் அதிகமாகவே ரசிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

காஜல் அகர்வால், சமந்தா மற்றும் நித்யா மேனன் என மூன்று கதாநாயகிகள் இருந்தாலும், நித்யா மேனனுக்கு நடிப்பதற்கும், வசனம் பேசுவதற்கும் அதிக இடம் என்பதால், அவரது கதாப்பாத்திரம் மனதில் நின்று விடுகின்றது.

முதல் பாதி முழுக்க வடிவேலு காமெடியிலும், இரண்டாம் பாதியில் குணச்சித்திர வேடத்திலும் கலக்குகிறார்.

வில்லனாக எஸ்.ஜே.சூர்யா மிரட்டல். கடந்த சில படங்களாக எஸ்.ஜே.சூர்யா மிகச் சிறந்த வில்லனாக மாறி வருகின்றார். இத்திரைப்படத்தில் பல காட்சிகளில் ரகுவரனை மீண்டும் நினைவுபடுத்தும் அளவிற்கு சிறப்பான நடிப்பு. அவருடன் ஹரீஸ் பேரடியின் நடிப்பும் சிறப்பு.

இது தவிர இடைவேளை வரை பல முடிச்சுகளை போடும் திரைக்கதை இடைவேளையின் போது அந்த சஸ்பென்சை உடைப்பது ரசிகர்களைத் துள்ளிக் குதிக்க வைக்கிறது.

தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் பல்வேறு முறைகேடுகள் குறித்துப் பேசும் கதைக் கரு, அதற்கு அரசாங்கம் செய்ய வேண்டியது என்ன? என்பதையும் பட்டியலிட்டுக் காட்டியிருப்பது ஏற்றுக் கொள்ளப் படவேண்டியது.

7 விழுக்காடு ஜிஎஸ்டி விதிக்கும் சிங்கப்பூரே அந்நாட்டு குடிமக்களுக்கு இலவச மருத்துவம் அளிக்கும் போது, 28 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்கும் இந்தியா ஏன் இன்னும் மருத்துவத்தை இலவசமாக்கவில்லை? அரசு மருத்துவமனைகளில் போதிய வசதியில்லை என்று கேள்வி எழுப்பியிருப்பதற்கு மலேசியாவிலும் கைதட்டல் அள்ளுகிறது.

மேஜிக் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் நம்பும்படியாக இல்லை என்றாலும், அதில் லாஜிக் பார்க்க முடியாத அளவிற்கு சில காரணங்களும் சொல்லப்படுகின்றது.

இரண்டாம் பாதியில் சில இடங்களில் கொஞ்சம் பார்த்து பழகிய காட்சிகளும், வசனங்களும் தெரிகின்றன. அதேவேளையில் கத்தி படத்தின் சாயலையும் ஆங்காங்கே பிரதிபலிக்கிறது. ஆனால் அவற்றையெல்லாம் விஜய் தனது நடிப்பால் தவிடுபொடியாக்குவது தான் படத்தின் பலம்.

ஜி.கே.விஷ்ணுவின் ஒளிப்பதில் காட்சிகள் மிக அழகாகத் தெரிகின்றன. குறிப்பாக பஞ்சாப்பிலும், தமிழ்நாட்டின் மதுரையிலும் காட்சிகள் வண்ணமயமாக உள்ளன.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும், பாடல்களும் படத்திற்குப் பக்க பலம். ஒரு கமர்ஷியல் சினிமாவிற்கு என்ன தேவையோ? அதை அப்படியே கொடுத்திருக்கிறார். எங்குமே ஏ.ஆர்.ரஹ்மான் இசை என்று தனியாகத் தெரியாமல் கதையோடு பிணைந்திருக்கிறது.

மொத்தத்தில், மெர்சல் – நிச்சயமாக தீபாவளிக்கேற்ற அறுசுவை விருந்து தான்..

-ஃபீனிக்ஸ்தாசன்