கோலாலம்பூர் – சர்ச்சைக்குரிய விதத்தில் மாஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநராகவும், முதன்மைத் செயல் அதிகாரி பதவியிலிருந்தும் விலகியிருக்கும் பீட்டர் பெல்லியூ, பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் நிர்வாகத் தலையீடு காரணமாகவே தனது பதவியிலிருந்து விலகினார் என முன்னாள் பிரதமர் துன் மகாதீர் குற்றம் சாட்டியுள்ளார்.
தனது வலைப் பதிவில் எழுதியுள்ள அவர், நஜிப் நாட்டின் தேசிய விமான சேவை நிறுவனத்தின் நிர்வாகத்திற்கும், இயக்குநர் வாரியத்திற்கும் தெரியாமல் தலையீடு செய்த காரணத்தால் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த பீட்டர் பெல்லியூ பதவி விலகினார் எனத் தெரிவித்திருக்கிறார்.
“நஜிப் வாங்க விரும்பும் விமானங்கள், மலேசிய ஏர்லைன்ஸ் தனது குறிப்பிட்ட விமான சேவைகளுக்கான இலக்குகளுக்காக பயன்படுத்த உத்தேசிக்கும் விமானங்கள் அல்ல. மாஸ் நிறுவனத்திடம் நஜிப் இதுகுறித்து கருத்து கேட்கவும் இல்லை என நான் நம்புகிறேன். முதன்மைச் செயல் அதிகாரியின் திட்டங்கள் என்ன, மாஸ் நிறுவனத்தின் தேர்வுகள் என்ன என்பது குறித்தெல்லாம் நஜிப் அந்நிறுவனத்தைக் கேட்கவும் இல்லை. அக்கறைப்படவும் இல்லை” என மகாதீர் மேலும் கூறியுள்ளார்.
“நஜிப் டிரம்புடன் புகைப்படம் எடுத்துக் கொண்டால் போதும். மாஸ் நிலைமை என்னவானாலும் நஜிப்புக்கு பரவாயில்லை” என்றும் மகாதீர் கடுமையாகச் சாடியிருக்கிறார்.
நஜிப் விமானம் வாங்குவதை அறிவித்து விட்டதால், பெல்லியூ வேறு வழியின்றி, தனது தாய் நாடு திரும்புவதாகக் காரணம் காட்டி, பதவியிலிருந்து விலகி விட்டார் என்றும் மகாதீர் தெரிவித்திருக்கிறார்.