சென்னை -சிங்கப்பூரில் இலவச மருத்துவம் என ‘மெர்சல்’ திரைப்படத்தில் சொல்லப்பட்டிருப்பது பொய் என பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா தெரிவித்திருக்கிறார்.
விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘மெர்சல்’ திரைப்படத்தில் இந்தியாவில் ஆளும் அரசாங்கம் குறித்து பல சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம்பெற்றிருக்கின்றன.
அவற்றில் குறிப்பிடத்தக்கவையாக, 28 விழுக்காடு ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா திட்டம், தனியார் மருத்துவமனைகளின் முறைகேடுகள் உள்ளிட்ட விவகாரங்கள் பேசப்பட்டிருக்கின்றன.
இது குறித்து ஆளும்கட்சியைச் சேர்ந்த பல தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா இது குறித்துத் தனது டுவிட்டரில் வெளியிட்டிருக்கும் கருத்தில்,
“சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம் என்பது பொய். இந்தியாவில் பள்ளி கல்வி, மருத்துவம் ஏழைகளுக்கு இலவசம்.ஜோசஃப் விஜயின் மோடி வெறுப்பே மெர்சல். ஏற்கனவே நாடு முழுவதும் பள்ளி கல்வி மற்றும் மருத்துவம் அரசு பள்ளி மற்றும் அரசு மருத்துவமனையில் இலவசம் தான். தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளில் கட்டப்பட்ட சர்ச் 17500, மசூதிகள் 9700, கோவில்கள் 370 இப்ப எதை தவிர்த்து மருத்துவமனை கட்டணும் என்கிறார் விஜய்” என்று எச்.ராஜா தெரிவித்திருக்கிறார்.